இந்தியா

தகுதிநீக்க நோட்டீஸ் விவகாரத்தில் 18 எம்எல்ஏக்கள் மற்றும் சச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்க தடை: ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

ராஜஸ்தானில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களான சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேர் மீதுவரும் 21-ம் தேதி வரை சட்டப்பேரவைத் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக்கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையே, அங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், பாஜகவுடன் இணைந்து ஆளும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முதல்வர் அசோக் கெலாட்டும், அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அங்கு அண்மையில் நடைபெற்ற இரண்டு காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் கலந்துகொள்ளவில்லை. இதனைக் காரணம் காட்டி, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், அவர்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக மாநிலசட்டப்பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷி நோட்டீஸும் வழங்கினார்.

இதற்கு எதிராக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தாங்கள் எந்த செயலையும் செய்யவில்லை என்றும், எனவே சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவானது, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் மீது வரும் 21-ம் தேதி வரை எவ்விதநடவடிக்கையும் எடுக்கக் கூடாதுஎன உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கானது 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர் மீது புகார்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சந்தீப் சிங் சுர்ஜேவாலா 2 ஆடியோக்களை நேற்று வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ பன்வாரிலால் சர்மா, பாஜக நிர்வாகி சஞ்சய் ஜெயின் ஆகியோர் இணைந்து, ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க சதிசெய்துள்ளனர். நாங்கள் வெளியிட்ட ஆடியோவில் இடம்பெற்றிருப்பது மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், எம்எல்ஏ பன்வாரிலால் ஆகியோரின் குரல்கள்தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த ஆடியோ நேற்று ஊடகங்களில் வெளியானது.

இவர்கள் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியை அகற்றுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பன்வாரிலால் சர்மா, விஷ்வேந்திர சிங் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

இதையடுத்து, கஜேந்திர சிங்ஷெகாவத், அதிருப்தி எம்எல்ஏ பன்வாரிலால் சர்மா, பாஜக நிர்வாகி சஞ்சய் ஜெயின் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து விசாரணை மேற்கொள்ள ராஜஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பாஜக நிர்வாகி சஞ்சய் ஜெயினை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறும்போது, ''இது என்னுடைய குரலே இல்லை. இந்த ஆடியோவில் எந்தசஞ்சய் ஜெயின் பற்றி அவர்கள் பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அந்தப் பெயரில் பலரும் உள்ளனர். நான் அவர்களிடம் பேசிஇருந்தால், என்னுடைய தொலைபேசி எண் பதிவாகி இருக்க வேண்டும். எந்தவிதமான விசாரணைக்கும் நான் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிறப்பு செயல்பாட்டுக் குழுவிடம் (எஸ்ஓஜி) ராஜஸ்தான் போலீஸார் ஒப்படைக்க உள்ளனர். ஏற்கெனவே ராஜஸ்தானில் மாநிலங்களவை தேர்தல் நடந்தபோது குதிரை பேரம் நடந்தது என்று ராஜஸ்தான்முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியிருந்தார். தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருஎம்எல்ஏ-வுக்கு ரூ.20 கோடி அளவுக்கு பணம் தர தயாராக இருந்தனர். இதற்கு துணை முதல்வர் சச்சின் பைலட்டும் உடந்தை என்று பகிரங்கமாகவே முதல்வர் கெலாட் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT