கோப்புப்படம் 
இந்தியா

சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.417 கோடி மதிப்புள்ள தொலைத்தொடர்பு ஒப்பந்த பணிகள் ரத்து: ரயில்வே அதிரடி

பிடிஐ

ரயில்வேயின் கிழக்கு மண்டலத்தில் சரக்குப் போக்குவரத்துக்காக பிரத்தியேகமாக அமைக்கப்படவுள்ள ரயில்வே இருப்புப்பாதையில் சிக்னல், தொலைத்தொடர்பு பணிகளுக்காக சீன நிறுவனத்துக்கு ரூ.417 கோடி மதிப்பில் வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரயில்வே திடீரென ரத்து செய்துள்ளது.

உத்தரப்பிரதேசம் கான்பூர்-முகல்சாரி நகரங்களுக்கு இடையே 471 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட இருந்த தொலைத்தொடர்பு பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சீன நிறுவனம் முடிக்காததால் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ரயில்வே சரக்குப் போக்குவரத்து கழகத்தின் இயக்குநர் அனுராக் சாச்சன் கூறியதாவது:

“ கான்பூர்-முகல்சாரி இடையே 471 கி.மீ தொலைவுக்கு சரக்கு போக்குவரத்துக்கு மட்டும் தனியாக இருப்புப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பாதையில் சிக்னல் மற்றும்தொலைத்தொடர்பு பணிகளை மேற்கொள்ள ரூ.417 கோடி மதிப்பில் சீன நிறுவனமான பெய்ஜிங் தேசிய ரயில்வே ஆய்வு மற்றும் சிக்னல், தொலைத்தொடர்பு வடிவமைப்பு மைய நிறுவனத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த பணிகளை வரும் 2022-ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். ஆனால், 2019-ம் ஆண்டுதான் பணிகளை சீன நிறுவனம் தொடங்கியது.

இதுவரை 20 சதவீத பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதாலும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க முடியாததாலும், சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து அதற்கான கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்குத் தேவையான நிதியை உலக வங்கி வழங்கி வருவதால், சீன நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டசெய்தியையும் தெரிவி்த்துவிட்டோம். அவர்கள் தடையில்லா சான்று இன்னும் அளிக்கவில்லை.

இதுவரை பணிகள் நடக்கும் இடத்தில் சீன நிறுவனத்தின் தரப்பில் பொறியாளர்களோ அல்லது திட்ட மேலாளர்களோ யாரும் இல்லாததும், வராமல் இருப்பதும் கவலைக்குரியதாகும்.

மேலும், உள்நாட்டு நிறுவனங்களுடனும் எந்தவிதமான தொடர்பிலும் சீன நிறுவனம் இல்லை. இதனால் பணிகள் நடப்பதில் பெரும் சுணக்கம் ஏற்பட்டது. பலமுறை சீன அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியும் பணிகளை நகர்த்திக் கொண்டு செல்வதில் சிக்கல் இருந்தது. அதனால் ஒப்பந்தத்தை அதிகாரபூர்வமாக ரத்து செய்துவிட்டோம்”

இவ்வாறு அனுராக் சாச்சன் தெரிவித்தார்

SCROLL FOR NEXT