காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம் 
இந்தியா

காங்கிரஸ் ஆட்சி பொற்காலம்: தொடர்ந்து 9 காலாண்டுகளாகப் பொருளாதாரச் சரிவு; மத்திய அரசு மீது ப.சிதம்பரம் சாடல்

பிடிஐ

நாட்டின் பொருளாதாரத்தை மத்திய அரசு கையாண்டு வரும் செயல்கள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து 9 காலாண்டுகளாக பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று வருகிறது என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

கரோனா வைரஸ் வருவதற்கு முன்பிருந்தே நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தேக்க நிலை காணப்பட்டது. பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த மத்திய அரசு பல்வேறு நிதித்திட்டங்களையும், ஊக்க அறிவிப்புகளையும், ரியல்எஸ்டேட், கார்ப்பரேட் நிறுவனங்கள், மோட்டார் வாகனத்துறை ஆகியவற்றுக்கு அறிவித்தது. ஆனாலும் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதத்திலுருந்து படிப்படியாகக் குறைந்து 5 சதவீதமாக வீழ்ந்தது. கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாகச் சரிந்தது.

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட முழு ஊரடங்கால் பொருளாதார வளர்ச்சி இன்னும் கடுமயைாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதம் கூட தேறுவது கடினம் என்று சர்வதேச பொருளாதார தர நிறுவனங்கள் கணித்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் மத்திய அரசின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்தும், பொருளாதாரத்தை கையாள்வது குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் பதிவிட்ட கருத்தில் “ காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளைப் பார்த்து கேலி செய்பவர்கள், கண்டிப்பாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும், அவர்களின் அறியாமை மற்றும் திறமையின்மையைக் கண்டு பொருளாதார வல்லுநர்கள் எல்லாம் நகைக்கிறார்கள்.

கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்ன செய்தது? தொடர்ந்து 9 காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி சரிவுக்கும், நடப்பு நிதியாண்டில் வர இருக்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்துள்ளது.

ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டுக்கான முன்னெடுப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் கடந்த 2005 முதல் 2015-ம் ஆண்டு இந்தியாவில் 27.30 கோடி மக்கள் ஏழ்மையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு-1 மற்றும் யுபிஏ-2 அரசு 2005 -2015 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தது. இந்திய பொருளதார வளர்ச்சிக்கான பொற்கால ஆண்டு காங்கிரஸ் ஆட்சி செய்த ஆண்டுகளாகும்..

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT