நாடு முழுதும் கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது, நாட்டின் சுகாதார உள்கட்டமைப்புகள் சரிந்து வருகின்றன, ஆனால் பாஜக அரசு ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசைக் கவிழ்ப்பதற்காக மும்முரமாக வேலை செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் சாடியுள்ளார்.
முதலில் கர்நாடகா, பிறகு மத்தியப் பிரதேசம் தற்போது ராஜஸ்தான் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கவிழ்ப்பதில் காட்டும் தீவிரத்தை கரோனா ஒழிப்பில் காட்டினால் நல்லது என்று சாடினார் அவர் .
“கரோனா பெருந்தொற்றினால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் பலியாகின்றனர், நாட்டின் மருத்துவ உட்கட்டமைப்புகள் வீழ்ந்து வருகின்றன.
ஆனால் ஜனநாயக ரீதியாக தேர்வு செய்த அரசுகளைக் கலைப்பதையே முன்னுரிமையாகக் கொண்டுள்ளது மத்தியில் ஆளும் பாஜக. இன்று வெளியான டேப்கள் பாஜகவின் சீரழிவு எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கரோனாவுக்கு எதிராக பிரமாதமாகச் செயல்பட்டு வரும் போது அம்மக்களுக்கு சேவை செய்ய விடாமல் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியக் கவிழ்க்க முயற்சி செய்கிறது. இதனால் கரோனா பதற்றம் தான் மக்களுக்கு அதிகரித்துள்ளது. ஜனநாயகத்தின் மீது படிந்த கறைதான் பாஜக.
ஏழைகளுக்குக் கொடுக்க மத்திய பாஜக அரசிடம் பணம் இல்லை அல்லது கரோனா சுகாதார பணியாளர்களுக்கு நல்ல சாதனங்களை வழங்கவும் பாவம் அவர்களிடம் பணம் இல்லை, ஆனால் ஜனநாயக ரீதியாக தேர்வு செய்த ஆட்சியைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கட்சியிடம் ஏராளமாக பணம் உள்ளது. எங்கிருந்து இந்தப் பணம் வருகிறது?” என்று சாடினார்.