ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று பாதுகாப்புப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குல்காம் மாவட்டத்தில் உள்ள நாக்நாத் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராஷ்ட்ர ரைஃபிள் பிரிவினர், காஷ்மீர் போலீஸார், துணை ராணுவப்படையினர் ஆகியோர் இன்று அதிகாலை அப்பகுதியைச் சுற்றி வளைத்து தேடினர்.
அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது.
இரு தரப்பிலும் நடந்த கடுமையான மோதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், துணை ராணுவப்படை வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஸ்ரீநகர் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில் “ குல்காம் மாவட்டத்தில் இன்று நடந்த என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் 3 பேரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் என்று அடையாளம் காணப்பட்டது.
அதில் ஒருவர் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை தயாரிக்கவும், அதைக் கையாளவும் திறமை பெற்றவர். அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன” எனத் தெரிவித்தார்.