திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம்முடிந்து ஆடி மாதம் முதல் நாள் ‘ஆனிவார ஆஸ்தானம்’ நடத்துவது ஐதீகம். இந்த ஆஸ்தானத்தின்போது, வருடாந்திர கணக்குவழக்குகள் உற்சவரிடம் ஒப்படைக்கப்படும். மேலும், அர்ச்சகர்கள் கோயில் சாவியை தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஜீயர்களிடம் வழங்குவர்.
இந்த ஐதீகம், மஹந்துகள் காலகட்டம் முதல் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழில் இது ‘ஆனி (மாதம்) வரை ஆஸ்தானம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. அதுவே மருவி ஆனிவார ஆஸ்தானமாகி விட்டது.
நேற்று ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கோயில் சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் கொண்டுவந்து சமர்ப்பிக்கப்பட்டது. முன்னதாக, கோயிலில் கருடன் சன்னதிஅருகே உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் மற்றும் சேனாதிபதியான விஸ்வகேசவர் முன்னிலையில், வருடாந்திர கணக்கு வழக்குகள் ஒப்படைக்கப்பட்டன. பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில், திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால், கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, ஸ்ரீரங்கம் கோயில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.
140 பேருக்கு கரோனா
திருமலையில் பணியாற்றும் 14 அர்ச்சகர்கள் உட்பட 140 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி கூறியுள்ளார். இவர்களில் 70 பேர் குணமடைந்தனர்.ஒருவர் மட்டுமே தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.