இந்தியா

பிளாஸ்மா தானம் செய்வோருக்கு கர்நாடகாவில் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை

செய்திப்பிரிவு

கர்நாடக கரோனா வைரஸ் தொற்று விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு அமைச்சர் சுதாகர் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. பெங்களூரு, கல்புர்கி உட்பட கர்நாடகா முழுவதும் கரோனா பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மருத்துவர்களின் அயராத உழைப்பின் காரணமாக இதுவரை 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி 650 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு விரைவில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த‌வர்கள் பிளாஸ்மா சிகிச்சைக்காக ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு குணமடைந்தவர்கள் ரத்த‌ தானம் செய்தால் கரோனா பாதிப்பில் இருப்போரை காப்பாற்ற முடியும். பிளாஸ்மா சிகிச்சைக்காக ரத்த தானம் செய்வோருக்கு கர்நாடக அரசு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக‌ வழங்கும் இவ்வாறு அமைச்சர் சுதாகர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT