இந்தியா

வீடியோ கூட்டம் நடத்தும் வசதியுள்ள ‘ஜியோ’ மூக்குக் கண்ணாடி விரைவில் அறிமுகம்: இஷா, ஆகாஷ் அம்பானி செயல் விளக்கம்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43வது ஆண்டு பொது கூட்டம்காணொலி மூலமாக நேற்று நடத்தப்பட்டது. இதில் உரையாற்றிய நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி,கூகுள் நிறுவனம் ஜியோ பிளாட்பார்மில் ரூ.33,737 கோடி முதலீடுசெய்துள்ள அறிவிப்பை வெளியிட்டார்.

அத்துடன் ஜியோ பிளாட்பார்மில் இருந்து ‘ஜியோ கிளாஸ்’ எனும் வெர்ச்சுவல் மூக்குக் கண்ணாடி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நிறுவனத்தின் தலைவர் கிரண்தாமஸ் அறிவித்தார். அதன் செயல் விளக்கத்தை ஆகாஷ் அம்பானி மற்றும் இஷா ஆகியோர் நடத்தினர். ஆகாஷ் முப்பரிமாண (3-டி) வடிவில் வந்தார். இஷா அம்பானி 2-டி வீடியோ அழைப்பை வெளிப்படுத்தினார். இவை மூக்குக் கண்ணாடியில் எவ்விதம் தெரிகிறது என்பது செயல் விளக்கம் மூலம் காட்டப்பட்டது.

கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றை ஜியோ கிளாஸ் மூலம் எப்படி நடத்துவது என்று செயல் விளக்கம் மூலம் காட்டப்பட்டது. இதில் டிஜிட்டல் நோட்ஸ்களையும், தகவல்களையும் பரிமாற முடியும் என்று கிரண் தாமஸ் கூறினார். ஜியோ பிளாட்பார்மில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்தது தொடர்பாக அந்நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை நிகழ்த்திய வீடியோ உரையும் காட்டப்பட்டது.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவும் வகையில் வகுப்பறை சூழலை முப்பரிமாணத்தில் இது அளிக்கும். இது 75 கிராம் எடை கொண்டது. இதன் உள்ளீடாக25 செயலிகள் உள்ளன. இது வீடியோ கூட்டங்கள் நடத்த உதவும்.இது போஸ் பிரேமால் ஆனது. வழக்கமாக இதுபோன்ற வெர்ச்சுவல் கண்ணாடிகளுக்கு 2 லென்ஸ்களிலும் கேமரா இருக்கும். ஆனால், ஜியோ கண்ணாடியில் நடுப்பகுதியில் மட்டும் ஒரு கேமரா உள்ளது. இது செயல்படுவதற்கான பேட்டரி மற்றும் ஸ்பீக்கர்கள் காது பகுதியில் வரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனினும் இதன் எடை வெறும்75 கிராம் மட்டுமே என்பது இதன்சிறப்பம்சமாகும். அனைத்து வகையான ஆடியோ பார்மேட்களையும் இதில் கேட்க முடியும். கான்பரன்ஸ்அழைப்பு, வீடியோ அழைப்புகளை இதன் மூலம் மேற்கொள்ள முடியும். ஹெட்செட்டில் உள்ளதைப் போல் இதன் கண்ணாடி லென்ஸ் வெர்ச்சுவல் திரையாக காட்சி தரும். அனைத்துக்கும் மேலாக இது குரல்வழி கட்டுப்பாட்டில் செயல்படக் கூடியது.

கூகுள் நிறுவனமும் ஜியோ நிறுவனமும் இணைந்து 4ஜி அல்லது 5ஜி போனை தயாரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தனது 35 கோடி வாடிக்கையாளர்களும் பயனடைவர் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார். காணொலி மூலமான இந்த கூட்டத்தில் 3 லட்சம் பங்குதாரர்கள் 41 நாடுகளின் 473 நகரங்களில் இருந்து பங்கேற்றனர். ரிலையன்ஸ் நிறுவனத்தில் 26 லட்சத்து 30 ஆயிரம் பங்குதாரர்கள் உள்ளனர்.

SCROLL FOR NEXT