திருவள்ளுவரின் எழுத்துக்கள் ஒளிபரப்பும்; இந்திய இளைஞர்கள் படித்து பயனடைய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 15-ம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய - சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து அண்மையில் லடாக் பகுதிக்கு சென்ற பிரதமர் மோடி ராணுவ வீரர்களிடம் உரையாற்றினார். அப்போது ‘‘இந்த நேரத்தில் படை வீரர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மகான் திருவள்ளுவர் ஒரு படை வீரர் எவ்வாறு இருக்க வேண்டும் என படைமாட்சி எனும் அதிகாரத்தில் தெரிவித்துள்ளார்.
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு என்று கூறியுள்ளார்.
அதாவது, வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசின் நம்பிக்கைக்கு உரியது ஆதல் எனும் நான்கும் படைக்கு காவல் அரண்களாகும் என்று மகான் திருவள்ளுவர் கூறியுள்ளார்'' என பிரதமர் மோடி பேசினார்
இந்தநிலையில் பிரதமர் மோடி திருக்குறளை மீண்டும் புகழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‘‘ திருக்குறள் அற்புதமாக ஊக்குவிக்கும் நூலாகும். திருக்குறள் உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், மிக உயர்ந்த ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.
திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படித்துப் பயனடைவார்கள் என நம்புகிறேன்.’’
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.