கரோனா வைரஸால் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்தும், அதிலிருந்து மீண்டு வளர்ச்சியை வேகப்படுத்துவது குறித்தும் நிதியமைச்சகம், வர்த்தக அமைச்சக உயர் அதிகாரிகள், அரசின் முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகள் என 50 பேருடன் பிரதமர் மோடி இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்தினார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காணொலி மூலம் ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவது எவ்வாறு, அதற்கான திட்டங்கள், கடந்த சில காலாண்டுகளாக இருக்கும் சுணக்கத்திலிருந்து எவ்வாறு மீள்வது ஆகியவை குறித்துதான் பெரும்பாலும் பிரதமர் மோடி ஆலோசித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து முழுமையாகத் தெரியவில்லை.
முன்னதாக, பொருளாதார ஆலோசனைக் கவுன்சில், நிதியமைச்சகத்தின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர், நிதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
கரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை மீட்பதற்காகவும், பொருளாதாரத்தை மீட்கவும் ரூ.21 லட்சம் கடன் நிதியுதவித் திட்டத்தை மத்திய அரசு கடந்த மே மாதம் அறிவித்தது. ஆனாலும், கரோனா வைரஸ் தாக்கம் முழுமையாக நாட்டில் குறையாததால், பொருளாதாரச் சூழல் இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை.
இந்தச் சூழலில் பொருளாதாரத்தை இயல்புப் பாதைக்குக் கொண்டுவரும் நோக்கில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், திட்டங்கள் குறித்து மோடி ஆலோசித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக தேவைப்பட்டால் கூடுதலான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.