கரோனா வைரஸ் பரவும் காலத்தில் கேரளாவில் வரும் 31-ம் தேதி வரை அரசியல் கட்சிகள் பேரணி, போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை கேரளாவில் 9,500 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது கேரளாவை உலுக்கிவரும் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக மாநில அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செல்வதும், போராட்டத்தில் ஈடுபடுவதுமாக இருந்தனர். இதையடுத்து வழக்கறிஞர் ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார்.
அதில், “தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுத்த வழிகாட்டுதல்களை மீறி அரசியல் கட்சிகள் போராட்டம், பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது கரோனா பரவும் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தும். ஆதலால், போராட்டம், பேரணிக்கு மாநிலம் முழுவதும் தடைவிதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஷாஜி பி சாலே ஆகியோர் முன் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஷாஜி பி சாலே ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில், கூறப்பட்டு இருப்பதாவது:
“மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் வழிகாட்டல்களை அரசியல் கட்சியும், அமைப்புகளும் மீறாமல் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபி ஆகியோர் கண்காணிக்க வேண்டும்.
தேசிய பேரிடர் மேலாண்மே ஆணையம் கடந்த மாதம் 29-ம் தேதி அறிவித்த வழிகாட்டலின்படி, பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதை அனுமதிக்க முடியாது.
மேலும், அரசியல் கட்சிகள் போராட்டம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி நடத்துவது ஆகியவை நடத்துவதும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவதாகும். வரும் 31-ம் தேதிவரை அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம், பேரணி நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டலில் அனுமதிக்கப்பட்டவை தவிர அனைத்தும் தடை செய்யப்படுகிறது''.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டது.