நேபாளத்தில் தோரி என்ற இடத்தில்தான் அயோத்தி உள்ளது, இங்குதான் ராமர் பிறந்தார் என்று நேபாளப் பிரதமர் கேபி.சர்மா ஒலி சர்ச்சைக்கருத்தை தெரிவித்ததையடுத்து அவருக்கு விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பிரதமர் ஒலியின் பேச்சுக்கு நேபாள ஆளுங்கட்சியினரே எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ராமர் கோயில் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வரும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளைத் தலைவர் நிருத்ய கோபால் கூறும்போது, “ராமர் பெயரை அரசியலில் இழுப்பதா? ராமராஜ்ஜியத்தில் நேபாளும் அடங்கியிருந்தது. அதனால் இந்தியா நேபாள உறவு வரலாற்றுக்கு முந்தையது.
ஆண்டு தோறும் ராமர் திருக்கல்யாண விழாவையொட்டி அயோத்தியிலிருந்து ஜனக்புரிக்கு பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது. சர்மா ஒலி பேசியது துரதிர்ஷ்டவசமானது” என்றார்.
விஸ்வ இந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் ஷரத் ஷர்மா கூறியதாவது: சர்மா ஒலி சீனாவின் தூண்டுதலால் ஆதாரமின்றி அபத்தமாகப் பேசி உள்ளார். அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பதற்கு. ஏராளமான ஆதாரங்கள் உள்ளன, என்றார்.