இந்தியா - ஐரோப்பிய யூனியன் 15-வது உச்சி மாநாடு நேற்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வொன் டெர் லியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்த மாநாடு ஐரோப்பாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார இணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என நம்புகிறேன்.
இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இயற்கையான கூட்டாளிகள். உலகில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நமது கூட்டுறவு பயனுள்ளதாக இருக்கும். இந்தியா, ஐரோப்பிய யூனியன்ஆகிய இரண்டும் ஜனநாயகம்,பன்மைத்துவம், அனைவருக்குமான வளர்ச்சி, சர்வதேச நிறுவனங்களுக்கு மரியாதை, பன்முகத்தன்மை, சுதந்திரம், வெளிப்படைத்தன்மை போன்ற உலகளாவிய மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. நாம் கரோனா வைரஸ் என்ற ஒரு பெரும் தொற்றுநோயை எதிர்கொண்டு போராடி வருகிறோம். கரோனா வைரஸ் பரவிவருவதால் உலக நாடுகள் பெரியஅளவில் பொருளாதாரப் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. கரோனா வைரஸால் எழுந்துள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்கில் இந்தியா..
‘ஸ்கில் இந்தியா’ திட்டம் தொடங்கி 5 ஆண்டு நிறைவடைந்ததை நினைவுகூரும் நிகழ்வில் காணொலி மூலம் பேசிய பிரதமர் மோடி, ‘‘கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க அனைவரும் தங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கூறினார்.