அசாம் மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சுமார் 33 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். புகழ்ப்பெற்ற காசிரங்கா தேசிய உயிரியல் பூங்கா முற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதில் காண்டாமிருகங்கள் உட்பட 66 வன விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன. வெள்ளத்தில் கிராம மக்கள் 61 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 117 விலங்குகள் மீட்கப்பட்டன.
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் சரணாலயமாக காசிரங்கா பூங்கா திகழ்கிறது. இங்கு தாயைப் பிரிந்து பெண்
காண்டாமிருகக் குட்டி ஒன்றுவெள்ளத்தில் அடித்துச் செல் லப்பட்டது. தகவல் அறிந்து வனத் துறை அதிகாரிகளும், மீட்புக் குழுவினரும் உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கினர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், வெள்ளத்தில் தவித்து வந்த ஒற்றைக் கொம்பு பெண் காண்டாமிருக குட்டியை நேற்று மீட்டனர். அதை படகில் ஏற்றி மீட்பு மையத்துக்கு கொண்டு சென்றனர். அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி அனைவரையும் உருக வைத்தது. காண்டாமிருகக் குட்டி மீட்கப்பட்டதைப் பார்த்து கிராம மக்கள் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
இதுகுறித்து காசிரங்கா பூங்கா வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஒற்றைக் கொம்பு தாய் காண்டாமிருகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதைகண்டுபிடித்த பிறகு, அதனுடன்குட்டியையும் சேர்த்து வைப்போம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.