கோப்புப்படம்: பெங்களூரு 
இந்தியா

பிஹாரில் நாளைமுதல் முழு ஊரடங்கு: 12 மாநிலங்களில் பல்வேறு நகரங்களில் கரோனா பரவலைத் தடுக்க மீண்டும் லாக்டவுன்

பிடிஐ

கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து 12 மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களில் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பிஹார் மாநிலத்தில் நாளை(16-ம் தேதி) முதல் 31-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கரோனா நோயாளிகள் நாடுமுழுவதும் குணமடைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தபோதிலும் கரோனாவினால் பாதிக்கப்படும் அளவு குறையவில்லை.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏற்கெனவே நேற்று இரவு 8 மணி முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தவிர கர்நாடகவின் தார்வாட், தட்சின கன்னட மாவட்டங்களிலும் அடுத்த ஒரு வாரத்துக்கு ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு அறிவிப்பால் நேற்று முழுவதும் பெங்களூரு, தார்வாட், தட்சின கன்னட மாவட்டங்களில் மக்கள் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் வாங்க பரபரப்புடன் அலைந்து கொண்டிருந்தனர். மதுபானக் கடைகளும் மூடப்படும் என்பதால் மொத்தமாக வாங்குவதற்காக அங்கும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41,581 ஆக இருக்கும் நிலையில் பெங்களூருவில் மட்டும் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதைத்தொடர்ந்து அதைக் கட்டுப்படுத்த தமிழகம், கேரளா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மீண்டும் லாக்டவுனை அமல்படுத்தியுள்ளன.

இதில் மேற்கு வங்க அரசு வரும் 19-ம் தேதிவரை லாக்டவுனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. சிக்கிம் அரசு, ரோங்லி, பாக்யாங் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த ஒருவாரத்துக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

பிஹார் மாநிலத்தில் தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து 16-ம் தேதி முதல் வரும் 31-ம் ேததிவரை 38 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது.

இந்தியாவில் ஜூலை மாதத்திலிருந்து கரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. 6 லட்சத்திலிருந்து 7 லட்சத்தைத் தொடுவதற்கு 5 நாட்களும், 7 லட்சத்திலிருந்து 8லட்சத்தை எட்ட 4 நாட்களும் தேவைப்பட்டன. 9 லட்சத்தை கரோனா பாதிப்பு கடந்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பில் 86 சதவீதம் 10 மாநிலங்களில்தான் இருக்கின்றன. கரோனாவுக்கு சிகிச்சை எடுத்துவரும் மக்களில் 50 சதவீதம் பேர் தமிழகம், மகாராஷ்டிராவில்(1,54,134) மட்டும்தான் இருக்கின்றனர். கர்நாடகா, டெல்லி, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்கம், குஜராத், அசாமில் மீதமுள்ள 36 சதவீதம்(1,11,068) நோயாளிகள் உள்ளனர்.

மகாரஷ்டிராவில் புனே, பிம்பி-சின்சாவத், ஓஸ்மானாபாத் மாவட்டங்கல் ஆகியவற்றில் ஒரு வாரத்துக்கு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அசாமில் கவுகாத்தி, காம்ரூப் ஆகிய மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூத்ரபூர், உதம்சிங் நகர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு வரும் 19-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் லாக்டவுன் கொண்டுவரப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் வார இறுதி நாட்களில் மட்டும் லாக்டவுன் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு நகரங்களில் லாக்டவுன் போடப்பட்டிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது உள்மாவட்டங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அருணாச்சலப்பிரதேச மாநிலம் வரும 20-ம் தேதிவரை தலைநகரில் லாக்டவுனை நீட்டித்துள்ளது. மேகலயமா மாநிலம் தலைநகர் ஷில்லாங்கில் லாக்டவுனை இன்றுவரை நீட்டித்துள்ளது. மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, ஜல்பைகுரி, மால்டா, கூச்பெஹார், ராய்காஞ்ச், சிலிகுரிஆகிய மாவட்டங்களில் மீண்டும் லாக்டவுன் கொண்டுவரப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT