ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் : கோப்புப்படம் 
இந்தியா

அடுத்த 6 மாதங்களில் வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத அளவு  அதிகரிக்கப் போகிறது: ரகுராம் ராஜன் எச்சரிக்கை

பிடிஐ


வங்கிகளின் வாராக்கடன் இதுவரையில்லாத அளவு அடுத்த 6 மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது விரைவாக பிரச்சினைகளை அடையாளம் கண்டு அதை முன்கூட்டியை சரிசெய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2020-ம் ஆண்டுக்கான இந்திய பொருளாதாரக் கொள்கைகள் குறித்து பொருளதாார ஆய்வுக்கான தேசியக் கவுன்சிலான என்சிஏஇஆ நடத்திய மாநாட்டில் காணொலி வாயிலாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும்,பொருளாதார வல்லுநரானன ரகுராஜன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டுவந்த லாக்டவுன் நடவடிக்கையால் ஏராளமான தொழில்நிறுவனங்கள், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் பெரும் சிக்கலிலும், பொருளாதார நெருக்கடியிலும் இருக்கின்றன. வங்கிகளில் பெற்றக் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றன.

இப்போதுள்ள வாராக்கடன் அளவை உண்மையில் நாம் உணர்ந்திருந்தால், இப்போதிருந்து அடுத்த 6 மாதங்களில் வங்கிகளில் வாராக் கடன் அளவு இதுவரை கண்டிராத அளவு மோசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. நாம் மிகவும் மோசமான சூழலில் இருக்கிறோம், விரைவாக பிரச்சினையின் தீவிரத்தை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது நலம்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜன்தன் வங்கிக் கணக்கின் மூலம் மக்களுக்கு நேரடியாக நிதியுதவி மத்திய அரசால் வழங்கப்படுகிறது என்று ஜன்தன் வங்கிக்கணக்கின் வெற்றியை பெருமிதம் கொண்டுள்ளார். ஆனால், உண்மையில் பொருளாதார வல்லுநர்களுக்கு ஜன் தன் வங்கிக்கணக்கின் வெற்றி மீது பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன.

யாருக்கு உதவி சென்று சேர வேண்டுமோ அந்த குறிப்பிட்ட தரப்பு மக்களுக்கு ஜன் தன் வங்கிக்கணக்கு மூலம் நிதியுதவி சென்றுசேர்வதில் பெரும் சிக்கல் இருக்கிறது. நாம் இப்போதும் உலகளாவியதன்மை குறித்துதான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால் நமக்கு இலக்கு இல்லை. ஜன் தன் வங்கிக்கணக்கு திட்டம் விளம்பரப்படுத்தும் அளவுக்கு போதுமான அளவு வேலை செய்யவில்லை.

இந்தியப் பொருளாதாரத்தில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்பது வேளாண்துறை சிறப்பாகச் செயல்பட்டு வருவது மட்டும்தான். வேளாண் துறையை சீரமைக்க அரசு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் நீண்டகாலத்துக்கு பேசப்பட வேண்டும். இதை சரியாக நடைமுறைப்படுத்தினால், பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிட்ட பகுதிக்கு உறுதியாக நல்ல பலன் கிடைக்கும்.

பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் வித்துகள், எண்ணெய், தானியங்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேமித்து வைக்காமல் ஏற்றுமதி செய்யலாம் என்று மத்திய அரசு திருத்தம் கொண்டுவந்தது வரவேற்கக் கூடியதுதான்.

இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT