மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டம் சந்தன் நகர் பகுதியில் உதவி ஆட்சியராக பணியாற்றியவர் தேவ்தத்தா ராய் (38). மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸை தடுக்கும் பணிகளில் சந்தன் நகரில் தேவ்தத்தா ராய், தீவிரமாக ஈடுபட்டு வந்தார். சந்தன் நகர் பகுதியில் நிவாரண முகாம், தனிமை முகாம்கள், பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.
இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர், அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று ஏற்பட்டது உறுதியானது. இதையடுத்து வடக்கு கொல்கத்தாவின் டம் டம் பகுதியிலுள்ள தனிமை முகாமில் அவர் தங்கவைக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் செராம்பூரில் உள்ள ஷிராம்ஜிபி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். கரோனா வைரஸால் உயிரிழந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முதல் பெண் உயர் அதிகாரி தேவ்தத்தா ராய் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.- பிடிஐ