ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குக் காங்கிரஸ் கட்சியின் பலவீனமே காரணம், முதல்வர் அசோக் கெலாட் கூறுவது போல் மத்திய பாஜக தலைமையல்ல என்று ராஜஸ்தான் பாஜக கூறிஉள்ளது.
சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியையும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியையும் பறித்து அசோக் கெலாட் தலைமை காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் சச்சின் பைலட் ஆதரவு அமைச்சர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்தது காங்கிரஸ்.
இந்நிலையில் ராஜஸ்தான் பாஜக துணைத் தலைவர் ஓம் பிரகாஷ் மாத்தூர் கூறும்போது, “டியர் அசோக் கெலாட், உங்கள் கண்களை மூடிக்கொண்டால் சூரியன் மறைந்ததாகாது. உங்கள் வீட்டு அமைப்பில் கோளாறு உள்ளது. பலவீனமாக உள்ளது, அதை சரிசெய்யுங்கள் அதை விடுத்து பாஜக மத்திய தலைமையை குற்றம்சாட்டுதல் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பாஜக துணைத்தலைவர் பைஜெயந்த் ஜெய் பாண்டா கூறும்போது, “வான்வழிப் போக்குவரத்தில் ஒவ்வொரு விமானத்திற்கும் திட்டமிருக்கும், மாற்று விமான நிலையம், அல்லது தொழில்நுட்பக் கோளாறு அல்லது வானிலை மோசமாக இருந்தால் மாற்றுப்பாதையில் விமானத்தைத் திருப்ப திட்டமிருக்கும். அனுபவமிக்க ஒவ்வொரு ‘பைலட்’டும் இதனை அறிந்திருப்பார்கள்” என்று சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக சூசகமாக ட்வீட் செய்துள்ளார்.
சச்சின் பைலட்டுடன் அரசியல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதா என்பதை பாஜக அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும் சச்சின் பைலட்டுக்கு நெருங்கிய வட்டாரங்கள் பாஜகவுடன் அவர் பேசியதாக கூறுகின்றனர்.
ஆனால் முன்னதாக சச்சின் பைலட் பாஜகவில் இணையமாட்டார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.