உண்மையான அயோத்தி நேபாளதில் உள்ளது, கடவுள் ராமர் ஒரு நேபாளி என்று நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியதையடுத்து காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராமர் நேபாளத்தில் பிறந்தவர், வால்மீகி ஆஸ்ரமம் நேபாளத்தில் உள்ளது, தசரத மகாசக்ரவர்த்தி புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடம் நேபாளில் உள்ளது என்று சர்மா ஒலி சரமாரியாகப் பேசியுள்ளார்.
இதற்குப் பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி, “நேபாளப் பிரதமர் ஒலியின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. அல்லது சீனா எழுதிக் கொடுத்ததை திருப்பிச் சொல்லும் கிளிப்பேச்சு பேசுகிறாரா, இல்லை சீனாவின் கைப்பாவையாகி விட்டாரா.
முதலில் நேபாளம் இதுவரை கோராத இந்திய பகுதிகளை தங்களுடையது என்று கோரினார். இப்போது ராமர், சீதை, ராமராஜ்ஜியத்தை நேபாளுக்குரியது என்கிறார்” என்று அபிஷேக் மனு சிங்வி விமர்சனம் செய்துள்ளார்.
முன்னதாக நேபாள் பிரதமர் இந்தியா பண்பாட்டு ஆதிக்கம் செலுத்துகிறது. ’போலி அயோத்தியை உருவாக்கியுள்ளனர்’ என்று கடும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார். அதே போல் ஜனக்புரி இங்கு உள்ளது, அயோத்தி அங்கு உள்ளது என்றால் தொடர்புச் சாதனங்கள் இல்லாத அந்தக் காலத்தில் ராமர் சீதையை அங்கிருந்து வந்து எப்படி மணந்திருக்க முடியும்? எனவே ராமர் இங்குதான் பிறந்துள்ளார், என்று நேபாளத்துக்குரியதாக்கிப் பேசினார் சர்மா ஒலி.