உ.பி.யில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட விகாஸ் துபேவின்வலதுகரமான அமர் துபேவின் புது மனைவி குஷி கைது செய்யப்பட்டதில் சர்ச்சை கிளம்பியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கான்பூரின் பிக்ரு கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபேவை, கான்பூர் போலீஸார் கடந்த 2-ம் தேதி இரவு கைது செய்யச் சென்றனர். இவர்கள் மீது விகாஸ் ஆட்கள் துப்பாக்கியால் சுட்டதில் 8 போலீஸார் இறந்தனர். இதையடுத்து தலைமறைவான விகாஸ் கடந்த 9-ம் தேதி ம.பி.யில் சிக்கினார். மறுநாள் கான்பூர் அழைத்துவரப்படும் வழியில் அவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். விகாஸ் தப்பியோட முயன்றதே இதற்கு காரணம் என போலீஸார் தெரிவித்தனர்.
8 போலீஸார் படுகொலையை தொடர்ந்து கடந்த 7-ம் தேதி விகாஸ் துபேவின் வலதுகரமான அமர் துபே என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். 8 போலீஸார் கொல்லப்பட்டதில் அமர் துபேவுக்கு முக்கியப் பங்கு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறுவயது முதல் விகாஸ் துபேவின் வீட்டில் வளர்ந்த அமர் துபேவுக்கு சமூகவலைதளங்கள் மூலம் அருகிலுள்ள ரத்தன்பூர் பங்க்கி கிராமத்தை சேர்ந்த குஷி என்ற பெண் அறிமுகம் ஆனார்.
ஏழைக் குடும்பத்தை சேர்ந்தகுஷி, தொடக்கத்தில் அமர்துபேவை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார். பிறகு அவரது குற்றப் பின்னணி தெரிந்ததும் மறுத்துவிட்டார். இந்நிலையில் குஷியை விகாஸ் துபே துப்பாக்கி முனையில் மிரட்டினார். கடந்த ஜூன் 29-ம் தேதி தனது வீட்டில் அமர் துபே – குஷி இருவருக்கும் திருமணம் செய்துவைத்தார்.
இந்நிலையில் 8 போலீஸார் கொலையை தொடர்ந்து அமர் துபேவின் தாயார் ஷாமா என்கிற ரேணு துபே, மனைவி குஷிமற்றும் பெண் பணியாளர் ஒருவரை கான்பூர் போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளிகள் தப்பிக்க உதவியதாக இவர்கள் மீது வழக்குப் பதிவானது. பிறகு விகாஸின் மனைவி ரிச்சா துபே, லக்னோவில் ஜூலை 9-ல் கைது செய்யப்பட்டார். எனினும் கான்பூர் போலீஸாரின் விசாரணைக்கு பிறகு இவர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் முக்கிய குற்றவாளி விகாஸின் மனைவியே விடுவிக்கப்பட்ட நிலையில் அமர் துபேவின் மனைவியை கைது செய்தது ஏன் என சர்ச்சை கிளம்பியது. மேலும் விகாஸின் மனைவி மட்டும் விடுவிக்கப்பட்டது ஏன் என சமூகவலைதளங்களில் கேள்வி எழுந்தது.
இதையடுத்து இப்பிரச்சினை குறித்து விசாரிக்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தினேஷ்குமாருக்கு கான்பூர் ஐ.ஜி. மோஹித் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே விகாஸ் துபே என்கவுன்ட்டர் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதி விசாரணைக் குழுவின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி சசிகாந்த் அகர்வால், பிக்ரு கிராமத்தில் நேற்று தனது விசாரணையை தொடங்கினார்.