அசாமில் கடந்த ஒரு வாரமாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் 24 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஏராளமான நெடுஞ்சாலைகள் மழை நீரில் மூழ்கியிருப்பதால், அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
இதனிடையே, வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அம்மாநில முதல்வர் சர்வானந்த சோனோவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் பாஜக எம்எல்ஏவான மிரினால் சாக்கியா, நேற்று தனது கும்தாய் தொகுதியில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை பார்வையிடுவதற்காக காரில் சென்றார். அப்போது, இடுப்பளவு தண்ணீரில் இறங்கிய அவர், வெள்ளத்தில் சிக்கியிருந்த பொதுமக்களையும், கால்நடைகளையும் மீட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. தொகுதி மக்களுக்காக களத்தில் இறங்கி பணியாற்றிய எம்எல்ஏ சாக்கியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.அசாமில் உள்ள கும்தாய் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் அத்தொகுதி எம்எல்ஏ மிரினால் சாக்கியா.