இமயமலையின் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் அசாதாரண சூழல் நீடித்து வருகிறது. குறிப்பாக, கடந்த மாதம் 15-ம் தேதி இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலை அடுத்து, போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தணிப்பதற்காக இரு நாடுகளுக்கு இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இதன் விளைவாக, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ், பாங்காங், பிங்கர் 4 உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கி வருகிறது. அதேபோல், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இருந்தும் 1,500 கிலோமீட்டர் தொலைவுக்கு அந்நாட்டு ராணுவ வீரர்கள் பின்வாங்கியுள்ளனர். இருந்தபோதிலும், பாங்காங் ஏரி, டெஸ்பாங் சமவெளி உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து அந்நாட்டு ராணுவம் வெளியேறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் பகுதிகளில் இருந்தும் சீன ராணுவம் வெளியேற வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக லடாக்கில் இந்தியாவுக்கு சொந்தமான சுசூல் கிராமத்தில் இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.