மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவங்களுக்கும், ராஜஸ்தானிலும் தற்போது காங்கிரஸில் நடக்கும் நிகழ்வுக்கு ராகுல் காந்தியே பொறுப்பு, இளம் தலைவர்கள் வளர்ந்தால் தனக்கு சிக்கல் ஏற்படுவதாக எண்ணி பயப்படுகிறார் என பாஜக மூத்த தலைவர் உமா பாரதி விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார்.
அங்கு துணை முதல்வராக உள்ள சச்சின் பைலட்டுக்கும், முதல்வர் கெலோட்டுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.
அசோக் கெலோட்டின் நடவடிக்கையால் சச்சின் பைலட் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜகவினர் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
ராஜஸ்தானிலும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் தங்கும்விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.
எனினும் மாநிலங்களவைத் தேர்தல் பிரச்சினை இன்றி நடந்து முடிந்தது. இந்தநிலையில் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக மீண்டும் முயலுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். இந்நிலையில் துணை முதல்வர் சச்சின் பைலட் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
அவருக்கு குறிப்பிட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிகிறது. சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லி அருகே குருகிராமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கூறியதாவது:
‘‘மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவங்களுக்கும், ராஜஸ்தானிலும் ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸில் நடக்கும் நிகழ்வுக்கு ராகுல் காந்தியே பொறுப்பு. காங்கிஸ் கட்சியில் இளம் தலைவர்கள் வளர்ந்தற்கு ராகுல் காந்தி அனுமதிக்கவில்லை. ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் போன்ற படித்த இளம் தலைவர்கள் உருவாகி விட்டால் தாம் பின்னுக்கு தள்ளப்படுவோம் என ராகுல் காந்தி அச்சப்படுகிறார்’’ எனக் கூறியுள்ளார்.