உத்திரப்பிரதேச ரவுடியான விகாஸ் துபே வழக்கில் கைதான துணை ஆய்வாளருக்கு தான் என்கவுண்டர் செய்யப்பட்டு விடுவோம் என்ற அச்சம் உருவாகி உள்ளது. இதற்காக, பாதுகாப்பு கேட்டு அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ரவுடி விகாஸ் துபேயை கான்பூரின் பிக்ரு கிராமத்தில் கைது செய்ய வந்த கான்பூர் போலீஸாரில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் வருகை குறித்து முன்கூட்டியே விகாஸுக்கு கிடைத்த தகவலால் இந்த சம்பவம் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.
இதற்கு காரணம் என பிக்ரு பகுதி காவல்நிலையமான சவுபேபூரின் ஆய்வாளர் வினய் திவாரி, துணை ஆய்வாளர் கிருஷ்ண குமார் சர்மா உள்ளிட்ட நால்வர் ஜுலை 7 இல் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, சிக்கிய விகாஸின் 3 சகாக்கள் கைதின் போது கான்பூர் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
இதேபோல், மத்தியப்பிரதேச காவல்துறையிடம் சிக்கிய விகாஸ் துபேயும் உபி போலீஸாரால் கடைசியாக என்கவுண்டர் செய்யப்பட்டார். இதனால், அவ்வழக்கில் கைதான கிருஷ்ண குமார் சர்மா தானும் என்கவுட்னர் செய்யப்படுவோம் என அஞ்சியுள்ளார்.
இதில் இருந்து தப்ப வேண்டி அவரது மனைவியான வினிதா சிரோஹி இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதில் அவர் சட்டவிரோதமாக தனது கணவர் சுட்டுக்கொல்லப்படும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது வினிதா சிரோஹியின் வழக்கறிஞர் அஷ்வின் குமார் துபே தாக்கல் செய்த மனுவில் கூறும்போது, ‘கான்பூர் துப்பாக்கி சூடு வழக்கில் விகாஸ் துபே உள்ளிட்ட அவரது கூட்டளிகள் நால்வரும் ஒரே வகையில் உபி போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.
இது சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் அதை செய்யாமல் தானே கையில் எடுத்திருப்பதை காட்டுகிறது. இதில், அவர்களால் கைது செய்யப்படுபவர்கள் அடுத்தடுத்ததாக என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.
கைதான கே.கே.சர்மாவை இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 12 இன்படி காக்க வேண்டியது அரசின் கடமை. எனவே, ஒரு சுந்தந்திரமான விசாரணை அமைப்பிற்கு இந்வ்வழக்கை மாற்றி வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும். ’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜுலை 2 நள்ளிரவு நடைபெற்ற சம்பவத்தில் விகாஸ் உள்ளிட்ட 21 பேர் மீது கான்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், சம்பவம் நடைபெற்ற அன்றே பிரேம் பிரகாஷ் பாண்டே மற்றும் அதுல் துபே ஆகிய இருவர் கொல்லப்பட்டனர்.
ஜுலை 8 இல் விகாஸின் வலதுகரமான அமர் துபே கான்பூரின் அருகிலுள்ள ஹமீர்பூரில் ஒளித்து தப்பிய போது என்கவுண்டர் செய்யப்பட்டார். அடுத்து ஜுலை இல் இருவேறு இடங்களில் விகாஸின் மேலும் 2 சகாக்கள் கான்பூர் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
இதில், பரிதாபாத்தில் கார்த்திகேய மிஸ்ரா எனப்படும் பிரபாத் மிஸ்ரா மற்றும் எட்டவாவில் பஹுவா எனப்படும் ஆகியோர் பலியாகினர். கடைசியாக ஜுலை 9 இல் விகாஸ் துபேயும் தப்பிச் செல்ல முயன்றதாக என்கவுண்டர் செய்யப்பட்டார்.
7 குற்றவாளிகள் மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்ட நிலையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஏற்கப்பப்பட்டால் ஆய்வாளர் வினய் திவாரி உள்ளிட்ட மூன்று போலீஸாரும் அவ்வழக்கில் மனு அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.