பாரமுல்லா நகரில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள காட்சி : படம் ஏஎன்ஐ 
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் இரு நாட்களில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் உள்பட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை: பாதுகாப்புப்படையினர் அதிரடி

பிடிஐ

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக், பாரமுல்லா ஆகிய இரு மாவட்டங்களில் நடந்த என்கவுன்ட்டரில் நேற்றிலிருந்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் உள்பட 4 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

இதில் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகுபுவாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று காலை அங்கு பாதுகாப்புப் படையினர் தேடுதலின் போது, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்சிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். இன்னும் தொடர்ந்து தேடுதல் பணிகள் நடந்து வருகின்றன என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் நகரில் உள்ள ரேபான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப்படையினர், போலீஸார் நடத்திய தேடுதல் பணியில் போது, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே மோதல் நடந்தது.

தீவிரவாதிகளை சரணடைந்துவிடுமாறு பாதுகாப்புப்படையினர் கேட்டுக்கொண்டனர். ஆனால், அதை மீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதால், அதற்கு பாதுகாப்புப்படையினர் தரப்பி்ல பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அவர்கள் மூன்று பேரில் இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களின் பெயர் அபு ரைபா என்ற உஸ்மான், சைபுல்லா ஆகிய இருவரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இதில் ரைபா கடந்த 2016-ம் ஆண்டிலிருந்தே காஷ்மீர் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டவர்.

கடந்த 1-ம் தேதி சிஆர்பிஎப் வீரர் மற்றும் சாமானியர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தேடப்பட்டவர் சைபுல்லா என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றொரு தீவிரவாதி பெயர் தெரியவில்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இந்த தீவிரவாதிகளிடம் இருந்து 3 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள், பணம் போன்றவை கைப்பற்றப்பட்டன.

SCROLL FOR NEXT