இந்தியா

சீனாவே நாட்டின் முக்கிய எதிரி: என்சிபி தலைவர் சரத் பவார் கருத்து

செய்திப்பிரிவு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் ‘சாம்னா’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நமது வெளியுறவு கொள்கைகளை நாம் ஒருபோதும் மாற்றிக்கொண்டதில்லை. ஆனால் நமது பிரதமர் நரேந்திர மோடி மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தார். சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை நட்புறவு பயணத்துக்கு அழைத்தார். சபர்மதி நதிக்கரையில் அவரை உபசரித்தார். சீனாவுடன் நட்புறவை ஏற்படுத்தியது போன்ற ஒரு தோற்றத்தை மோடி ஏற்படுத்த முயன்றார். ஆனால் அவரது முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

பிரதமராக மோடி பதவியேற்றவுடன் முதல் வெளிநாட்டுப் பயணமாக நேபாளம் சென்றார். தற்போது அந்நாடு சீனாவின் பக்கம்நிற்கிறது. பாகிஸ்தான் ஏற்கெனவேசீனா பக்கம் உள்ளது. வங்கதேசவிடுதலையில் இந்தியா முக்கியப் பங்காற்றியது. ஆனால் அந்நாடுஅண்மையில் சீனாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதேதான் இலங்கை விஷயத்திலும் நடந்துள்ளது. இந்தியாவைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளும்இந்தியாவுக்கு எதிராகப் பேசுகின்றன. அரசின் வெளிநாட்டுக் கொள்கை தோல்வி அடைந்துள்ளது.

நம் நாட்டின் முக்கிய எதிரி சீனாதான், பாகிஸ்தான் அல்ல. சீனாவுடனான பிரச்சினைகளை போர் மூலம் தீர்க்க முடியாது. அந்நாட்டுடன் நேரடிப் போரில் ஈடுபட முடியாது. தூதரக ரீதியிலும் பேச்சுவார்த்தை மூலமும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்க வேண்டும். பிற நாடுகள் மற்றும் ஐ.நா. உதவியுடன் சீனாவுக்கு நெருக்குதலை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT