உ.பி.யில் ரவுடி விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக விகாஸின் குற்றச் செயல்கள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று தனது விசாரணையை தொடங்கியது.
கான்பூரின் பிக்ரு கிராமத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய கடந்த 2-ம் தேதி இரவு போலீஸார் சென்றனர். இவர்கள் மீது விகாஸ் ஆட்கள் சரமாரியாக சுட்டதில் 8 போலீஸார் உயிரிழந்தனர். இதையடுத்து தலைமறைவான விகாஸ், ம.பி.யின் உஜ்ஜைன் நகரில் கடந்த 9-ம் தேதி சிக்கினார். அவரை ‘டிரான்ஸிட் ரிமாண்ட்’ மூலம் கான்பூர் அழைத்துவந்த போலீஸார், நகரில் நுழைவதற்கு சற்று முன்பாக என்கவுன்ட்டர் செய்தனர். விகாஸ் தப்பியோட முயன்றதே இதற்கு காரணமாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த என்கவுன்ட்டர் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சசிகாந்த் அகர்வால் தலைமையில் விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் அரசு நேற்று உத்தரவிட்டது. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக 1999 முதல் 2005 வரை பணியாற்றிய சசிகாந்த் அகர்வால், பிறகு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி 2019-ல் ஓய்வுபெற்றார்.
பிக்ரு கிராமத்தில் கான்பூர் போலீஸார் மீதான துப்பாக்கிச்சூடு மற்றும் ஜூலை 10-ல் விகாஸ் மீதானஎன்கவுன்ட்டர் குறித்து நீதிபதி சசிகாந்த் அகர்வால் குழு விசாரிக்கும். இக்குழு தனது அறிக்கையை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கும்.
முன்னதாக, விகாஸின் குற்றச் செயல்கள், அரசியல் மற்றும் போலீஸ் தொடர்புகள் குறித்து விசாரிக்க மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சய் ஆர்.புஸ்ரெட்டி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) உ.பி. அரசு நேற்று முன்தினம் அமைத்தது. இக்குழு பிக்ரு கிராமத்தில் நேற்று தனது விசாரணையை தொடங்கியது.
உ.பி. ஏடிஜிபி ஹரிராம் சர்மா,டிஐஜி ஜே.ரவீந்தர் கவுட் ஆகியோரும் இடம்பெற்ற எஸ்ஐடி குழுவுடன் கான்பூர் மாவட்ட ஆட்சியர் பிரம்மதேவ் திவாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தினேஷ்குமார் ஆகியோரும் பிக்ரு சென்றிருந்தனர். இக்குழுவும் தனது அறிக்கையை இம்மாத இறுதிக்குள் அரசிடம் அளிக்கவுள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி. காவல்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறும்போது, “2001-ல் உ.பி. இணைஅமைச்சர் சுட்டுக் கொல்லப்பட்டவழக்கில் விகாஸ் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற வழக்குகள் மீதும் எஸ்ஐடி விசாரிக்கும். கடும் குற்றங்களில் ஈடுபட்டபோதிலும் விகாஸுக்கு எதிராக தேசிய பாதுகாப்புச் சட்டம், மாநில குண்டர் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் எனவும் எஸ்ஐடி ஆராயும்.
குற்ற வழக்குகளில் விகாஸ் பெற்ற ஜாமீனை கான்பூர் போலீஸார் ரத்துசெய்ய முயற்சிக்காதது மற்றும் அவரது கும்பலிடம் இருந்த ஆயுதங்கள் குறித்தும் எஸ்ஐடி விசாரிக்கும்” என்று தெரிவித்தனர்.
இதனிடையே விகாஸின் மூத்த மகன் ஆகாஷ் துபே நேற்று லக்னோவில் உள்ள தனது சித்தப்பா தீப் பிரகாஷ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த போலீஸ் காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி தங்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பிறகு தீப்பின் மனைவி அஞ்சலி, போலீஸ்அதிகாரிகளிடம் பேசி ஆகாஷை வீட்டுக்கு அழைத்துக் கொண்டார். ரஷ்யாவில் மருத்துவப் பட்டப்படிப்பு படித்து வரும் ஆகாஷ் அங்கிருந்து விமானப் போக்குவரத்து இல்லாத நிலையில் திடீரென வந்தது எப்படி என விசாரிக்கின்றனர். ரஷ்யாவிலிருந்து திரும்பிய அவர் தனது படிப்பு காரணமாக எந்த சர்ச்சையிலும் சிக்க விரும்பாமல் உறவினர் வீட்டில் தங்கிருக்கலாம் என கருதப்படுகிறது.