கோப்புப்படம் 
இந்தியா

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்குவது எப்போது?- மத்திய அமைச்சர் பதில்

பிடிஐ

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் நாடாளுமன்ற மழைக் காலக்கூட்டத் தொடரைத் தொடங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 3-ம் தேதிவரை இரு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு கூட்டத்தொடர் பிப்ரவரி 11-ம் தேதி முடிந்தவுடன் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

மார்ச்-2் ம் தேதி 2-ம் கட்ட அமர்வு தொடங்கியது. ஆனால், நாடு முழுவதும் கரோனா வைரஸ் ப ரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட காலத்துக்கு முன்பே அதாவது மார்ச் 23-ம் தேதியே நாடாளுமன்றக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

முதல் கட்ட அமர்வில் மக்களவை, மாநிலங்களவை இரு அவைகளிலும் 7 அமர்வுகள் நடந்தன. 2-வது கூட்டத்தில் 14 அமர்வுகள் நடந்தன. மக்களவையில் 15 மசோதாக்களும், மாநிலங்களவையில் 13 மசோதாக்களும் நிறைவேறின. கூட்டம் ஒத்திவைக்கப்படும் முன் அனைத்து முக்கிய நிதி மசோதாக்களும் நிறைவேறின.

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி : கோப்புப்படம்

பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையின் செயல்பாடு 90 சதவீதமும், மாநிலங்களவை செயல்பாடு 74 சதவீதமும் இருந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் கரோனா வைரஸ் தாக்கம் நாட்டில் குறையாத நிலையில் மழைக்காலக் கூட்டத் தொடர் எப்போது நடத்தப்படும் அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியிடம் இன்று பிடிஐ நிருபர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் அளித்த பதிலில், “நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரைக் கூட்டுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். செப்டம்பர் வரை நமக்குக் காலம் இருக்கிறது. பலமுறை ஆகஸ்ட் இறுதியோடு கூட்டத்தொடர் முடிக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழலில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இது மேலும் எப்படி விரிவடைகிறது என்று பார்க்கலாம்” என்று பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT