ரவுடி விகாஸ் துபே சட்டவிரோதமாக சம்பாதித்த பல கோடி ரூபாய் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தீவிரமாகி உள்ளது. இதன் ஒரு கட்டமாக மத்திய அமலாக்கத் துறை உத்தரபிரதேச காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிக்ரு கிராமத்தில் 8 போலீஸார் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்தியபிரதேசத்தின் உஜ்ஜைனில் மஹாகால பைரவர் கோயிலில் சிக்கினார். இவரை கைது செய்த ம.பி. போலீஸாரிடம் இருந்துஉத்தரபிரதேச காவல் துறை ‘டிரான்ஸிட் ரிமான்ட்’ பெற்று கான்பூர் அழைத்துச் சென்றது. அப்போது தப்பி ஓட முயன்றதாக நேற்று முன்தினம் விகாஸ் துபே உத்தரபிரதேச அதிரடிப் படையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதனிடையே கடந்த 7-ம் தேதி மத்திய அமலாக்கத் துறை சார்பில் உத்தரபிரதேச காவல் துறைக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
கான்பூர் சரக ஐஜியான மோஹித் அகர்வாலுக்கு அனுப்பியநோட்டீஸில், “மிகவும் குறுகிய காலத்தில் விகாஸ் துபே கோடீஸ்வரராகி உள்ளார். இதில் ஹவாலாவில் பணம் சேர்க்க அவரது 14 வெளிநாட்டு பயணங்கள் உதவி உள்ளன. துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளிலும், தாய்லாந்திலும் சொத்து சேர்த்துள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விகாஸ் கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் பல்வேறு சொத்துகளை சேர்த்ததாகக் கருப்படுகிறது. பாங்காங்கின் ஒரு பிரபல ஓட்டலில்விகாஸ் சமீபத்தில் முதலீடு செய்துள்ளார். துபாயிலும் வெளிநாடுவாழ் இந்தியர்களால் நடத்தப்படும் வியாபார நிறுவனங்கள் சிலவற்றிலும் விகாஸின்முதலீடு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கான்பூரின் பிக்ரு கிராமத்தின் சம்பவத்திற்கு பிறகு விகாஸின் சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை உத்தரபிரதேச அரசு தொடங்கியது. மத்திய வருமானவரித் துறையும் தனது நடவடிக்கைகளை தனியாக செய்து வருகிறது. இதில், கடைசியாக லக்னோவின் முக்கியப் பகுதியான ஆர்யா நகரில் ரூ.23 கோடிமதிப்பில் ஒரு சொகுசு பங்களாவை விகாஸ் வாங்கியுள்ளார். இப்பகுதியின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் விகாஸின் 16 வீடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நகரின் மற்ற பகுதிகளில் 11 பங்களாக்களும், கான்பூரில் ஒன்றும் என விகாஸுக்கு 12 பங்களாக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஜூன் 3-ல் பிக்ருகிராமத்தில் இருந்து தப்பிய விகாஸின் சகாக்களான சசிகாந்த் பாண்டே, ஷிவம் துபே ஆகியோருக்கு 4 நாட்கள் சட்டவிரோதமாக அடைக்கலம் அளித்ததாக ஓம் பிரகாஷ் பாண்டே, அனில் பாண்டே ஆகிய இருவரும் கான்பூரின் ஊரகப் பகுதியில் நேற்றுகைதாகினர். இவர்கள் அடைக்கலம் கொடுத்தவர்களின் தலைக்குரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, விகாஸின் ஈமச்சடங்கில் அவரது பெற்றோர்இருவருமே கலந்துகொள்ளவில்லை. இதற்கு விகாஸ் செய்த குற்றச்செயல்கள் காரணம் எனஇருவரும் கூறியுள்ளனர். இந்தவழக்கில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான காவல் துறையினர் செய்தது சரியே எனவும் வாதிட்டுள்ளனர்.
இதுகுறித்து பிக்ருவில் வாழும் விகாஸின் தந்தையான ராம் குமார் துபே கூறும்போது, "எனது மகன் மீது உத்தரபிரதேச அரசு எடுத்த நடவடிக்கை சரியானது. அவன் எங்கள் அறிவுரையை கேட்டிருந்தால் இந்த மரணம் ஏற்பட்டிருக்காது. இவன் 8 போலீஸாரை கொன்றது மன்னிக்க முடியாத குற்றம். விகாஸால் பிக்ருவில் எங்கள் மூதாதையர் வீடு இடிக்கப்பட்டது. இனியாவது அதில் தங்க என்னை அனுமதிக்க வேண்டும்" என்றார்.