இந்தியா

பெங்களூருவில் த‌மிழ் அருட்தந்தை கரோனாவுக்கு பலி

இரா.வினோத்

பெங்களூருவில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த தமிழ் அருட்தந்தை அந்தோணிசாமி (61) காலமானார். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

பெங்களூருவைச் சேர்ந்த அருட்தந்தை அந்தோணிசாமி கடந்த 2019-ல் கோலார் தங்கவயலில் உள்ள செயிண்ட் தெரஸா ஆலயத்தில் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டார்.

அங்கு ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் உடல் நிலை பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன் தினம் இரவு அருட்தந்தை அந்தோனிசாமி உயிரிழந்தார். ஜூலை 9ம் தேதி அவரது 61 பிறந்த நாளிலேயே உயிரிழந்தது உறவினர்கள், பங்கு மக்கள், துறவிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட அருட்தந்தை அந்தோணிசாமி தாய்மொழி தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டிருந்தார். 1988ல் குரு பட்டம் பெற்ற இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இறைப் பணியோடு மக்கள் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.

காவிரி கலவரத்திற்கு பிறகு தமிழில் திருப்பலி நிறைவேற்றுவதற்கு கடும் எதிர்ப்பு வந்த போதும், தொடர்ந்து தமிழிலே திருப்பலி நிறைவேற்றினார்.

பெங்களூருவில் உள்ள சிவாஜிநகர் ஆரோக்கிய அன்னை பேராலயம், தம்புசெட்டி பாளையா புனித அந்தோணியார் ஆலயம், அன்னம்மா மலை ஆலயம் ஆகியவை திருத்தலமாக வளர்த்தெடுத்தலில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. அந்த பங்குகளில் தமிழ் கிறிஸ்துவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை பெற்றுதருவதில் முனைப்பாக செயல்பட்டார்.

மறைந்த அருட்தந்தை அந்தோணிசாமியின் உடல் பெங்களூருவில் உள்ள திரு இருதய ஆலயத்தில் உள்ள கல்லறையில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

கரோனா பாதிக்கப்பட்டிருப்பதால் உரிய பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் அவரது உடலை அடக்கம் செய்தனர். அவரது குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்த பட்டிருப்பதால் இறுதி நிகழ்வில் பங்கேற்க இயலாமல் போனது.

அருட்தந்தை அந்தோணிசாமியின் இறுதி திருப்பலியை பெங்களூரு பேராயர் பீட்டர் மச்சாடோ கன்னடத்திலும், அருட்தந்தை ஜெயநாதன் தமிழிலும் ஆன்லைன் மூலமாக நிறைவேற்றினர்.

SCROLL FOR NEXT