கோப்புப்படம் 
இந்தியா

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை கரோனா நோயாளிகள் தனிமைப்படுத்தும் இடமாக மாற்ற அனுமதி

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானம், கரோனாவால் பாதிக்கப்படும் கொல்கத்தா போலீஸாரைத் தனிமைப்படுத்தும் இடமாகப் பயன்படுத்தப்பட உள்ளது.

ரசிகர்கள் அமர்ந்திருக்கும் கேலரி பகுதிகளைக் கரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் இடமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 27 ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது, 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் கரோனா நோயாளிகள் புதிதாக உருவாகி வருகின்றனர். நாட்டிலேயே கரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நகரங்களில் கொல்கத்தாவும் ஒன்றாகும்.

கொல்கத்தாவில் கரோனா தடுப்பு முன்களப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாரில் இதுவரை 544 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 411 பேர் குணமடைந்துள்ளனர், இருவர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கரோனா வைரஸால் பாதிக்கப்படும் போலீஸாரைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கத் தேவைப்படும் இடம் குறித்து கொல்கத்தா போலீஸார் ஆலோசித்தனர். அதன்படி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் இடமாகப் பயன்படுத்த போலீஸார் தரப்பில் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, கொல்கத்தா லால் பஜார் காவல் ஆணையர் ஜாவித் ஷாமிம், கொல்கத்தா கிரிக்கெட் அமைப்பின் தலைவர் அபிஷேக் டால்மியா, நேஹாஷிஸ் கங்குலி ஆகியோருக்குக் கடிதம் எழுதி, ஈடன் கார்டன் மைதானத்தைத் தந்து உதவும்படி வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளை ஏற்று ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள பார்வையாளர்கள் மாடம் இ,எப், ஜி,ஹெச் ஆகிய பகுதிகளையும், தேவைப்பட்டால் ஜெ பகுதியையும் போலீஸாரைத் தனிமைப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கொல்கத்தா கிரிக்கெட் அமைப்பின் தலைவர் அபிஷேக் டால்மியா நிருபர்களிடம் கூறுகையில், “இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் அரசு நிர்வாகத்துக்கு உதவுவது எங்களின் கடமை. போலீஸாரைத் தனிமைப்படுத்தும் பகுதியாக மைதானத்தைப் பயன்படுத்திக்கொள்ள போலீஸார் கேட்டுக்கொண்டதன் பெயரில் அனுமதித்துள்ளோம்.

இதற்காக 5 பார்வையாளர்கள் மாடங்களை போலீஸாருக்கு ஒதுக்கியுள்ளோம். கொல்கத்தா போலீஸார், கொல்கத்தா கிரிக்கெட் அமைப்புக்கு இடையே இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் எந்த பாதிப்பும் இருக்காது.

மைதானப் பராமரிப்பாளர்கள், மற்ற ஊழியர்கள் அனைவரும் பி.சி,கே,எல், ஆகிய பகுதிகளுக்குச் செல்வார்கள். நிர்வாகப் பணிகள் அனைத்தும் கொல்கத்தா கிரிக்கெட் கிளப் அலுவலகத்துக்குத் தற்காலிகமாக மாற்றப்படும். பி,சி,டி,கே.எல். ஆகிய பார்வையாளர்கள் மாடங்கள் தற்போதைக்குப் பயன்படுத்தப்படாது” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT