காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி : கோப்புப்படம் 
இந்தியா

காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்களுடன் சோனியா காந்தி சந்திப்பு: கரோனா பரவல், அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை

பிடிஐ


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தங்களுடடைய கட்சியின் மக்களவை எம்.பி.க்களுடன் காணொலி வாயிலாக இன்று சந்தித்துப் பேசினார். இதில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு, அரசியல் நிலவரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு 8 லட்சத்தைத் தாண்டியுள்ளது, கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 22 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்திய அரசை விமர்சி்த்து வருகிறது.

ஏழைகள், நடுத்தர மக்களுக்கு மாதந்தோறும் நேரடியாக நிதியுதவியை கரோனா பாதிப்பு முடியும் வரை வழங்க வேண்டும், குறு,சிறு,நடுத்தர நிறுவனங்கள் அழிந்துவிடாமல் காக்க, மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

எல்லையில் இந்திய சீன ராணுவம் மோதலிலும் காங்கிரஸ்கட்சி மத்திய அரசை காட்டமாக விமர்சித்தது. எல்லைப் பிரச்சினையை மத்தியஅரசு முறையாகக் கையாளவில்லை, பல உண்மைகளை மறைக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப்பெறக்கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் நாடுமுழுவதும் போராட்டமும் நடத்தினர்.

இந்த சூழலில் வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் எவ்வாறு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க மக்களவை எம்.பி.க்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இந்த ஆலோசனைக் காட்டத்தில், கரோனா வரைஸ் பரவலைத் தடுக்க மத்திய எடுத்துவரும் நடவடிக்கைகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எல்லைப் பிரச்சினை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT