கரோனா பரவல் காரணமாக அத்தியாவசியமான முகக்கவசங்களில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. புனேயை சேர்ந்த ஒரு நபர் ரூ.2.89 லட்சம் செலவில் தங்கத்திலான முகக்கவசத்தை தயாரித்து அணிந்ததையடுத்து சூரத்தில் வைரக்கல் பதித்த முகக்கவசங்கலை நகைக்கடை ஒன்று விற்பனை செய்து வருகிறது.
வைரக்கற்கள் பதித்த முகக்கவசங்களின் விலை ரூ.1.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐடியா எப்படி வந்தது என்று நகைக்கடை உரிமையாளர் தீபக் சோக்ஸி கூறும்போது, வாடிக்கையாளர் ஒருவர் தன் வீட்டுத் திருமணத்துக்கு மணமகன் மணமகளுக்கு இந்த வைரம் பதித்த முகக்கவசத்தை பரிசாக அளிப்பதற்காக செய்து கொடுக்கக் கேட்டார்.
எனவே எங்கள் வடிவமைப்பாளர்களிடம் இதை தயாரிக்குமாறு கேட்டிருந்தோம். இந்த நகை முகக்கவசத்தை வாடிக்கையாளர் வாங்கிச் சென்றார். அப்போது முதல் ஏன் இதையே ஒரு விற்பனைப் பொருளாக மாற்றக்கூடாது என்று தோன்றியதில் பலதரப்பட்ட வடிவமைப்புகளில் தயாரித்தோம்.
சுத்த வைரம், அமெரிக்க வைரக்கற்கள் உடன் தங்கமும் சேர்க்கப்பட்டு இந்த முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகிறது. யெல்லோ கோல்டுடன் அமெரிக்க வைரச்க்கற்களுடன் தயாரிக்கப்படும் முகக்கவசம் விலை ரூ.1.5 லட்சம். வெள்ளை தங்கம் மற்றும் உண்மையான வைரத்துடன் தயாரிக்கப்படும் முகக்கவசம் ரூ.4 லட்சம் ஆகும்.
இந்த முகக்கவசத்திலிருந்து தங்கத்தையும் வைரத்தையும் வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் தனியாக எடுத்து விடலாம், என்றார் உரிமையாளர்.