முதல்வர் பினராயி விஜயன்- கோப்புப் படம் 
இந்தியா

கேரளாவில் இன்று 416 பேருக்கு கரோனா தொற்று: முதல்வர் பினராயி விஜயன் தகவல்

கா.சு.வேலாயுதன்

கேரளாவில் இன்று 416 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:

கேரளாவில் இன்று 416 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் முதன்முதலாக தான் ஒரு நாளில் 400 பேருக்கும் அதிகமாக நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று 112 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களை விட கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவுவது அதிகரித்து வருகிறது.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 123 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 51 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 204 பேருக்கு நோய் பரவி உள்ளது. இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 36 பேருக்கும், தொழிற் பாதுகாப்பு படை மற்றும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தலா ஒருவருக்கும் இன்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 129 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 50 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 41 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 32 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், தலா 28 பேர் பாலக்காடு மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களையும், 23 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 20 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், தலா 17 பேர் திருச்சூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களையும், தலா 12 பேர் கோழிக்கோடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களையும், 7 பேர் கோட்டயம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று நோய் குணமடைந்தவர்களில் 24 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 19 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 18 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 14 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 9 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 8 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 5 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், தலா 4 பேர் இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும், 3 பேர் காசர்கோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

கடந்த 24 மணி நேரத்தில் 11, 693 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது பல்வேறு மாவட்டங்களில் 1,84,112 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 3,517 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 472 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 3, 20,485 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 4,525 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 70,122 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 66,132 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது.

தற்போது கேரளாவில் 194 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. கேரளாவில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பது இப்போதைக்கு விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை வசதிகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உடல்நிலை மோசமாக உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு மருத்துவமனைகளும், மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கரோனா சிகிச்சை மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் தனியார் மருத்துவமனைகளின் உதவி நாடப்படும். இந்தியாவில் உள்ள பெரிய நகரங்கள் கூட கரோனாவின் தாண்டவத்திற்கு அடிபணிந்து விட்டன. முதல் கட்டத்தில் சமாளித்து நின்ற பெங்களூரு நகரத்தில் கூட இப்போது நோய் பரவுவது மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று 1,373 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கேரளாவில் இப்போது நோய் பரவலின் வேகம் மிக அதிகரித்துள்ளது. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நம் மாநிலம் முழுவதும் நோய் அதிகரிக்க நீண்ட நாட்கள் தேவைப்படாது. மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும். எனவே நாம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். கடந்த மார்ச் 24ம் தேதி இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட போது நோயாளிகள் எண்ணிக்கை 519 ஆக இருந்தது. அன்று 9 பேர் மட்டுமே மரணம் அடைந்திருந்தனர்.

ஆனால் இப்போது நோயாளிகள் எண்ணிக்கை 7, 93,802 ஆக உயர்ந்துள்ளது. 21,604 பேர் மரணமடைந்துள்ளனர். நாம் எந்த அளவிற்கு அபாய கட்டத்தில் உள்ளோம் என்பதை இந்த கணக்குகள் காட்டும். வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட கரோனா நோய் பரவலை கண்டு திகைத்து நின்றபோது கியூபா, வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகள் தான் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டன.

சீனாவும் முதல் கட்டத்தில் நோய் தடுப்பு முறைகளை சிறப்பாக மேற்கொண்டது. அந்த நாடுகளில் மக்கள் அரசுக்கு மிகவும் ஒத்துழைப்பு அளித்து நோய் தடுப்பு நடவடிக்கைகளில் பங்கு பெற்றனர். அந்த நாடுகளைப் போலவே தான் கேரளாவிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். திருவனந்தபுரம் மாவட்டத்தில் மார்ச் மாதத்தில் 11 நோயாளிகள் மட்டுமே இருந்தனர். ஆனால் நேற்று நோயாளிகள் எண்ணிக்கை 481 ஆக உயர்ந்துள்ளது. இதில் 215 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். 266 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவி உள்ளது.

கேரளாவுக்கு இதுவரை வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 5,31,330 பேர் வந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து 1,98 ,026 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து 3 ,33,304 பேரும் வந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் கேரள அரசின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT