இந்தியா

பிஹார் சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக அடுத்த மாதம் தேர்தல்: தீபாவளியின்போது புதிய அரசு அமையும்

பிடிஐ

பிஹார் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) நடுவில் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. 5 கட்டங்களாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

அம்மாநிலத்தில் புதிய அரசு தீபாவளிக்கு (நவம்பர் 10) முன்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி அக்டோபர் 2-வது வாரத்தில் தொடங்கும் தேர்தல் நவம்பர் முதல் வாரம் வரை 5 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளது.

தேர்தலை எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது. எனவே மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் வீரர்கள் தேர்தலின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கும் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கூட்டணிகளுமே ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பிரதமர் மோடியும் பிஹாரில் தேர்தல் பிரச்சாரம் செய்துள் ளனர்.

தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு மேலும் பல முக்கிய தலைவர்கள் பிஹாருக்கு பிரச்சாரம் செய்ய செல்வார்கள். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்குப் பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் இதில் வெற்றி பெற வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜக ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிதான் பிஹாரில் ஆட்சியில் இருந்தது. மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் எதிர்த்ததால் கூட்டணி உடைந்தது. பிஹாரில் ஆட்சியில் இருந்து பாஜக வெளியேறியது. அதன் பிறகு பிஹார் அரசியலில் தீவிர எதிரிகளாக கருதப்பட்ட நிதிஷும் லாலுவும் நெருக்கம் காட்டினர். பிறகு இது தேர்தல் கூட்டணியாக மாறியது. காங்கிரஸ் கட்சியும் இவர்களுடன் இணைந்தது.

எனவே இத்தேர்தலில் வெற்றி பெற நிதிஷ் கூட்டணியும் பாஜக கூட்டணியும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

SCROLL FOR NEXT