இந்தியா

இந்திய மீனவர்களுடன் பேச்சு நடத்த இலங்கை மீனவர்கள் மறுப்பு

பிடிஐ

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைக்கு பேச்சு நடத்தி தீர்வு காணலாம் என்ற தமிழக மீனவர் களின் அழைப்பை இலங்கை மீனவர்கள் நிராகரித்து விட்டனர்.

இது குறித்து இலங்கை மீனவர் அமைப்பின் நிர்வாகி விநாயக மூர்த்தி சகாதேவன் நேற்று வவுனியாவில் கூறும்போது, “இரு நாட்டு மீனவர் பிரச்சினை குறித்து இலங்கையில் பேச்சு நடத்தலாம் என்ற தமிழக மீனவர்களின் அழைப்பை நிராகரித்து விட்டோம். இதனால் எந்தப் பலனும் ஏற்படாது என்பதால் நிராகரித்தோம்.

இரு நாடுகளின் பிரதமர்கள் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாதபோது, மீனவர் சமூகப் பிரதிநிதிகள் எப்படி தீர்வு காணமுடியும்?

பேச்சுவார்த்தையில் இலங்கை மீன்வளத்துறை அதிகாரி களையும் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் இது அர்த்தமுள்ளதாக இருக்கும். இரு நாடுகளின் மீனவர் சமூகப் பிரதிநிதிகள் மட்டும் பேசுவதால் எந்தத் தீர்வை யும் எட்ட முடியாது” என்றார்.

இலங்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலுக்குப் பின் பிரதமராக பதவியேற்ற ரனில் விக்ரமசிங்கே, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக கடந்த வாரம் இந்தியா வந்தார். அப்போது இருநாட்டுப் பிரதமர்களும் மீனவர் பிரச்சினை குறித்து பேசியதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விநாயகமூர்த்தி சகாதேவன் கூறும்போது, “மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை இந்தியத் தலைவர்கள் என்ன பேசினார்கள் என்று உள்ளூர் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட வில்லை” என்றார்.

தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை தங்கள் பகுதியில் மீன் பிடிப்பதாக கூறி கைது செய்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதுபோல் இந்தியப் பகுதியில் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்படும்போது, அவர்களை விடுவிக்க சட்டரீதியிலான நடவடிக்கைகளை இலங்கை அரசு விரைந்து எடுப்பதில்லை என்று அந்நாட்டு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

SCROLL FOR NEXT