தந்தை ராம்விலாஸ் பாஸ்வானுடன் சிராக் பாஸ்வான் : கோப்புப்படம் 
இந்தியா

தேர்தல் ஒத்திவைப்பா? கரோனா காலத்தில் பிஹாரில் தேர்தல் நடத்தினால் மக்களின் நலன் பாதிக்கும்: ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி சூசகம்

பிடிஐ


கரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் இந்த நேரத்தில் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தினால் மக்களின் உடல்நலன் பாதிக்கப்படும். கரோனாவுக்கு பயந்து மக்கள் வாக்களிக்கவும் வரமாட்டார்கள் இதனால் வாக்கப்பதிவு சதவீதமும் குறையும் என்று பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி தெரிவித்துள்ளது

பிஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடக்கிறது. 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், இன்னும் தேர்தல் ஆணையம் தேர்தல் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஆனால், பிஹார் மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந்த சூழலில் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி கரோனா காலத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமானது அல்ல, தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி மறைமுகமாக கோரிக்கை விடுத்துள்ளது

லோக் ஜனசக்திக் கட்சியின் தலைவரும் ராம்விலாஸ் பாஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்வான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பிஹார் மட்டுமல்ல நாடுமுழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதிநிலை மட்டுமல்ல, பிஹாரின் நிதிநிலையையும் கரோனா பாதித்துள்ளது.

இந்த நேரத்தில் தேர்தல் நடத்துவது மாநிலத்துக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.
பல்வேறு சூழல்களைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் முடிவு செய்ய ேவண்டும். கரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில் தேர்தல் நடத்தினால், மிகப்பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்படுவார்கள். கரோனாவுக்கு பயந்து மக்களும் வாக்களிக்க வரமாட்டார்கள்,

இதனால் வாக்குப்பதிவு சதவீதமும் குறைந்துவிடும். இது ஜனநாயகத்துக்கும் நல்லதல்ல. ஒருவேளே தேர்தல் நடத்தினாலும் அதை எதிர்கொள்ள எங்கள் கட்சி தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்

SCROLL FOR NEXT