பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

நாடுமுழுவதும் கரோனா தொற்று; 80 சதவீதம் பேர் 49 மாவட்டங்களில் இருப்பதாக தகவல்

செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் 8 மாநிலங்களில் மட்டுமே சுமார் 90 சதவீத கரோனா தொற்றுள்ளவர்கள் உள்ளனர், கரோனா தொற்றுள்ளவர்களில் 80 சதவீதம் பேர் 49 மாவட்டங்களில் மட்டுமே இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காணொலிக் காட்சி மூலமாக இன்று நடைபெற்ற கோவிட்-19 தொடர்பான உயர்நிலை அமைச்சர்கள் குழுவின் 18வது கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தலைமை வகித்தார்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர்ஹர்தீப் எஸ். பூரி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, மத்திய ரசாயனங்கள், உரங்கள் மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் மன்சூக் மண்டாவியா மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வினோத்பால் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அமைச்சர்கள் குழுவிடம் இந்தியாவின் தற்போதைய கோவிட்-19 நிலைமை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. உலக அளவில் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்ட 5 நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் 10 லட்சம் நபர்களுக்கு தொற்று ஏற்படுவோர் எண்ணிக்கையானது (538) மிகக் குறைவாகவும் அதேபோன்று 10 லட்சம் நபர்களுக்கு மரணம் ஏற்படும் எண்ணிக்கை (15) மிகக் குறைவாகவும் இருப்பது தெரிய வருகிறது.

இவற்றின் சர்வதேச சராசரி எண்ணிக்கை என்பது தொற்றைப் பொறுத்தளவில் 1453 எனவும் இறப்பைப் பொறுத்தளவில் 68.7 எனவும் இருக்கிறது. இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 8 மாநிலங்களில் (மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் குஜராத்) மட்டுமே சுமார் 90 சத தொற்றுள்ளவர்கள் உள்ளனர். அதேபோன்று 49 மாவட்டங்களில் மட்டுமே 80 சத தொற்றுள்ளவர்கள் உள்ளனர்.

இதுவரை ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 6 மாநிலங்களில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், மற்றும் மேற்குவங்கம்) ஏற்பட்ட மொத்த இறப்பு 86 சதம் ஆகும். மொத்த இறப்புகளில் 80 சத இறப்பு 32 மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளது.

தொற்றுள்ளோரில் இறப்பு ஏற்படும் விகிதம் அதிகம் உள்ள பிராந்தியங்களில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர்கள் குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT