பெங்களூரு, சர்ஜாப்பூரை சேர்ந்த38 வயது பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு காவல் ஆணையர் அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர், “நான் கடந்த மார்ச் மாதம் சண்டிகரில் உள்ளஎனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தேன். ஊரடங்கால் சிக்கிய நான் இப்போது விமானம் மூலம் பெங்களூரு வந்தேன். ஆனால் கரோனா அச்சம் காரணமாக என்னை வீட்டுக்குள் அனுமதிக்க கணவர் மறுக்கிறார். 14 நாட்கள் அரசு கண்காணிப்பு மையத்தில் தனிமையில் இருக்குமாறு கூறுகிறார்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து ஆணையர் அலுவலக உத்தரவின்படி வர்த்தூர் காவல் நிலைய போலீஸார் அப்பெண்ணின் கணவரிடம் பேசினர். அப்போது, “அரசு விதிகளின்படி மகாராஷ்டிராவில் இருந்து வருவோரை மட்டுமே 14 நாள்தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பவேண்டும். சண்டிகரில் பாதிப்புகுறைவாக இருப்பதால் தனிமைப்படுத்தல் கட்டாயமில்லை” என்று தெரிவித்தனர்.
மகளிர் உதவி மையத்தை சேர்ந்த மனநல ஆலோசகரும் அப்பெண்ணின் கணவரிடம் மனைவியை வீட்டுக்குள் அனுமதிக்குமாறு வலியுறுத்தினார். இதையடுத்து கணவரை சமாதானம் செய்த அவர் அப் பெண்ணிடம் 1 வாரத்துக்கு தனிமையில் இருக்குமாறு கூறி வீட்டுக்குள் அனுப்பினார்.