மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் ஏழை மக்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டியதன் அவசியம் கருதி, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை ஜூலை முதல் நவம்பர் வரை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான 24 சதவீத பங்களிப்பு தொகையை மத்திய அரசே செலுத்தும் திட்டத்தை ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் வங்கியது. மொத்தம் ரூ.4,860 கோடி செலவிலான இத்திட்டத்தால் 72 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலன் அடைவார்கள். 7.4 கோடி ஏழைப் பெண்களுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர் வழங்க கடந்த மார்ச் மாதம் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தை பெண்கள் செப்டம்பர் வரை பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் ஒரு துணைத் திட்டமாக நகர்ப்புறங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக வாடகை குடியிருப்புகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.