பாஜக பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் : கோப்புப்படம் 
இந்தியா

ராஜீவ் காந்தி அறக்கட்டளை விவகாரம்: மத்திய அரசின் உத்தரவில் அரசியல் இருந்தால் 6 ஆண்டுகளாக அமைதியாக இருந்திருக்காது: முரளிதர் ராவ் பேட்டி

பிடிஐ

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்பத்தார் நடத்தும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்ளிட்ட 3 அறக்கட்டளையின் நிதி விவகாரங்களை விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டதில் அரசியல் நோக்கம் இருப்பதாகக் கூறினால், 6 ஆண்டுகளாக மத்திய அரசு அமைதியாக இருந்திருக்காது என்று பாஜக பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைவராக இருக்கும், ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி சாரிடபிள் டிரஸ்ட், இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகியவை சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டம், வருமானவரிச் சட்டம், அந்நிய நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றை மீறிச் செயல்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணையை ஒருங்கிணைக்க அமைச்சர்களுக்கு இடையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழுவுக்கு அமலாக்கப் பிரிவின் சிறப்பு இயக்குநர் தலைவராக இருப்பார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பாஜக பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

பாஜக பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறுகையில், “சோனியா காந்தி குடும்பத்தார் நடத்தும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்பட 3 அறக்கட்டளையின் நிதி விவகாரங்கள், பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டது என்பது சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கத்தோடு எடுக்கப்பட்டது என்று குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. ஒருவேளே இந்த அறக்கட்டளைகள் மீதான புகார்கள் ஏற்கெனவே வந்திருந்து உண்மையாக இருந்தால், மத்தியில் ஆளும் மோடி அரசு 6 ஆண்டுகள் காத்திருந்திருக்காது.

சோனியா காந்தி தலைவராக இருக்கும் அறக்கட்டளைப் பரிமாற்றங்கள் மக்களுக்குத் தெரியவேண்டும். மத்தியில் ஆளும் பாஜக அரசு வெளிப்படைத் தன்மையை உறுதி செய்து ஆட்சி செய்கிறது. பொதுவெளியில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை குறித்து ஏராளமான தகவல்கள் வந்தபின், அந்தப் பரிமாற்றங்கள் குறித்து மத்திய அரசு விசாரிக்க உத்தரவிடுவதும் இயல்பான ஒன்றுதான்.

காங்கிரஸ் கட்சியினர், அந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்'' என்று முரளிதர் ராவ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT