உத்தரப்பிரதேசம் கான்பூரில் 8 போலீஸார் ரவுடி கும்பலால் கடந்த வாரம் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவரும் முக்கியக் குற்றவாளி விகாஸ் துபேயின் முக்கிய உதவியாளர் அமர் துபே இன்று போலீஸாரார் சுட்டுக்கொல்லப்பட்டார்
ஹமிர்பூர் மாவட்டம், மவுதாஹா கிராமத்தில் சிறப்பு அதிரடிப்படைநடத்திய தேடுதலில் அமர் துபே சுட்டுக்கொல்லப்பட்டார் என்று போலஸீார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கான்பூரில் டிஎஸ்பி, 2 துணை ஆய்வாளர்கள் கொல்லப்பட்டபின் நடக்கும் 3-வது என்கவுன்ட்டர் இதுவாகும்.
கான்பூர் அருகில் உள்ள பிக்ருஎன்ற கிராமத்துக்கு கடந்த 2-ம் தேதி ரவுடி விகாஸ் துபேவை போலீஸார் பிடிக்கச் சென்றனப். அப்போது, அவரது ஆட்களால் டிஎஸ்பி, 2 துணை ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, ரவுடி விகாஸ் துபே கும்பலைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டது. ரவுடி விகாஸ் இருக்கும் இடத்தை தெரிவிப்பவர்களுக்கு ரூ.2.50 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்றும், அவரின் உதவியாளர் அமர் துபே இருக்கும் இடத்தை தெரிவிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படும் என்று போலீஸார் அறிவித்திருந்தனர்
இந்நிலையில் ஹமிர்பூர் மாவட்டத்தில், மவுதாஹா எனும் கிராமத்தில் அமர் துபே பதுங்கி இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இன்று அதிகாலை உ.பி. போலீஸாரின் சிறப்பு அதிரடிப்படை மவுதாஹா கிராமத்துக்குள் அதிரடியாக நுழைந்து அமர் துபேயை கைது செய்ய முயன்றனர். ஆனால், அமர் துபே போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அவரை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்
இதுகுறித்து சிறப்பு அதிரடிப்படையின் ஐஜி அமிதாஷ் யாஷ் நிருபர்களிடம் கூறுகையில் “ ஹமிர்பூர் மாவட்டம், மவுதாஹாவில் அமர் துபே பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவரை கைது செய்ய சிறப்பு அதிரடிப்படை சென்றனர். அப்போது அவர்களை நோக்கி அமர் துபே துப்பாக்கியால் சுட்டதால் அதற்கு போலீஸார் நடத்திய பதிலடி தாக்குதலில் அமர் துபே கொல்லப்பட்டார். அவர் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு ரூ.25 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படும் எனத் தெரிவி்த்திருந்தோம்
ரவுடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளியாகவும், நம்பிக்கைக்குரியவராகவும் அமர் துபே இருந்தார். விகாஸ் துபே எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பு அளி்ப்பவராக அமர் துபே இருந்தார்,விகாஸ் துபே எங்கு சென்றாலும் உடன் செல்வார்.
8 போலீஸார் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏற்கெனவே பிரேம் பிரகாஷ் பாண்டே, அதுல் துபே இருவரை கடந்த வெள்ளிக்கிழமை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். இப்போது 3-வது ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
விகாஸ் துபேயின் உறவினர் ஷாமா, சுரேஷ் வர்மா, உதவியாளர் ரேகா, ரேகாவின் கணவர் தயாசங்கர் அக்னிஹோத்ரி ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்