பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

206 ஊழியர்கள், குடும்பத்தினருக்குத் தனி விமானம்: அமெரிக்காவில் சிக்கியவர்களைத் தாயகம் அழைத்து வந்தது இன்போசிஸ் நிறுவனம்

பிடிஐ

கரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் சிக்கிய 206 இந்திய ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினரைத் தனி விமானம் மூலம் இன்போசிஸ் நிறுவனம் தாயகம் அழைத்து வந்துள்ளது.
அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து 300-க்கும் மேற்பட்டவர்களுடன் புறப்பட்ட விமானம் திங்கள்கிழமை காலை பெங்களூரு விமான நிலையம் வந்து சேர்ந்தது.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு வேலைக்காகச் சென்றுள்ள இந்தியர்கள் சர்வதேச விமானச் சேவை ரத்து செய்யப்பட்டதால் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.

இதையடுத்து, இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ், தனது நிறுவனத்தில் பணியாற்றும் 206 ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினரை அமெரிக்காவில் இருந்து தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வர முடிவு செய்தது.

இந்தியாவில் பணியாற்ற விருப்பம் தெரிவித்தோர், இந்தியாவில் பணியாற்ற வேண்டிய நிலையில் இருப்போர் உள்ளிட்டவர்களைத் தேர்வு செய்து இந்த விமானத்தில் அழைத்து வந்தது.

ஞாயிற்றுக்கிழமையன்று சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து 206 ஊழியர்கள், 100-க்கும் மேற்பட்ட அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருடன் புறப்பட்ட தனி விமானம் பெங்களூருவில் நேற்று காலை வந்து சேர்ந்தது. அனைவருக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் விதிமுறைப்படி கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனத்தின் வர்த்தகப்பிரிவுக்கான துணைத்தலைவர் சமீர் கோஸவி கூறுகையில், “சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து 200-க்கும் மேற்பட்ட இன்போசிஸ் ஊழியர்கள் அவர்களின் குடும்பத்தாருடன் புறப்பட்ட தனி விமானம் பெங்களூருவில் நேற்று காலை வந்து சேர்ந்தது. அரசின் விதிமுறைப்படி அனைவருக்கும் பரிசோதனை நடந்தது” எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மற்ற தகவல்களைத் தெரிவிக்க இன்போசிஸ் நிறுவனம் மறுத்துவிட்டது.

இன்போசிஸ் நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், “சான் ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்து 206 ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் இந்தியாவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், கரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவுக்குச் செல்ல முடியாமல் அமெரிக்காவில் தவித்து வந்தனர்.

இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்காகவும், அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர் சேவைக்காகவும், முக்கியமான ஆலோசனைக்கூட்டம், குறுகியகாலப் பயிற்சி ஆகியவற்றில் பங்கேற்க அமெரிக்கா சென்றபோது அங்கு சிக்கிக்கொண்டனர். அவர்கள் அழைத்து வரப்பட்டனர்” எனத் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT