ஜனதா பரிவாருக்காக சமாஜ்வாதி கட்சியின் அடையாளத்தை இழக்க வேண்டாம் முலாயம் சிங் யாதவுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட 6 கட்சிகள் ஜனதா பரிவார் என்ற அமைப்பின் கீழ் செயல்படுகின்றன. இக்கட்சிகளை ஒன்றாக இணைக்கும் நடவடிக்கை இன்னும் முழுமை அடையாமல் உள்ளது.
இந்நிலையில் பிஹாரில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலையொட்டி ஜக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்தன.
இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சி னையில் சமாஜ்வாதி கட்சி இக்கூட்டணியில் இருந்து விலகியது. இதனால் ஜனதா பரிவார் அமைப்பின் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
மெகா கூட்டணியில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகுவதற்கு முன், முலாயம் சிங்கை கட்சியின் மூத்த தலைவர்கள் ராம்கோபால் யாதவ், முகமது ஆசம் கான் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
இவர்கள் “வரும் 2017 தேர்தலில் உ.பி.யில் பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை தோற்கடித்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதில் நாம் முழு கவனம் செலுத்த வேண்டும். ஜனதா பரிவார் தொடர்பான தேசிய அரசியல் திட்டங்களை தற்போதைக்கு தள்ளிவைக்க வேண்டும். இதன் மூலம் சமாஜ்வாதி கட்சி தனது அடையாளத்தை இழக்குமானால் அது நமது யாதவர், முஸ்லிம் வாக்கு வங்கியை பாதிக்கும்” என்று வலியுறுத்தியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உ.பி.யில் காங்கிரஸை எதிர்த்து சமாஜ்வாதி அரசியல் செய்வதால், பிஹாரில் அக்கட்சி இடம்பெற்றுள்ள கூட்ட ணியில் முலாயம் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறப் படுகிறது.