கிழக்கு லடாக் எல்லையில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டு பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு கடும் குளிரைத் தாங்கும் வகையிலான கூடாரங்கள் தேவை எனத் தெரிய வந்துள்ளது. கிழக்கு லடாக் பகுதியில் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. எல்லைப் பிரச்சினை காரணமாக நீண்ட நாட்களாக அங்கு இந்திய ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். ஆனால், தற்போதுள்ள கூடாரங்கள் கடும் குளிரைத் தாங்கும் சக்தி படைத்தவை அல்ல என்பது தெரிய வந்துள்ளது. எனவே கடும் குளிரைத் தாங்கும் சக்தி படைத்த கூடாரங்களை உடனே தயாரித்து வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எல்லையில் நிலைமை சரியாக அக்டோபர் வரை தேவைப்படும் என்பதால் உடனடியாக கூடாரங்களைத் தயாரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அப்பகுதியில் சுமார் 30 ஆயிரம் ராணுவ வீரர்கள், அதிகாரிகள் தங்கியுள்ளனர்.
தற்போது கிழக்கு லடாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சில கூடாரங்கள் மட்டுமே கடும் குளிரைத் தாங்கும் வல்லமை படைத்தவை. இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் கூடாரங்களை தயாரித்து வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சியாச்சின் பகுதியில் பயன்படுத்தப்படும் கூடாரங்களை போல, லடாக்கில் பயன்படுத்தும் வகையில் தயாரித்து வழங்க பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.