இந்தியா

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம்

செய்திப்பிரிவு

கே.ரங்கசுவாமி

குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் நாடுமுழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார். முன்னாள் ராணுவ வீரர்கள் அனைவரும் மீண்டும் நாட்டுக்கு சேவையாற்ற அழைக்கப்பட உள்ளனர்.

லடாக், வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப்பகுதிகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் நடைபெறுகிறது. இந்த போரில் சீனாவுக்குரஷ்யா முழுஆதரவு அளிப்பது இந்தியாவுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஏதாவது ஒருவகையில் சீனாவுக்கு ரஷ்யா அழுத்தம் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது.

இந்த இக்கட்டான நேரத்தில் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். அரசமைப்பு சாசனம் அமலுக்கு வந்த பிறகு முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஒட்டுமொத்த அதிகாரமும் மத்திய அரசு வசமாகி உள்ளது. இனிமேல் மாநில அரசுகளின் அதிகார வரம்பிலும் மத்திய அரசால் தலையிட முடியும்.

நவம்பர் 8-ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்டமுடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் எல்லைப் பிரச்சினை குறித்து அனைத்து கட்சிகளுடனும் விவாதிக்கப்பட உள்ளது. தேசிய மேம்பாட்டு கவுன்சில் நவம்பர்4-ம் தேதி கூடுகிறது. இதில் பல்வேறு முக்கிய வியூகங்கள் வகுக்கப்பட உள்ளன.

மாநில அரசுகளின் ஊர்க் காவல் படையை நாட்டின்சேவைக்காகப் பயன்படுத்தமத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், முன்னாள் ராணுவவீரர்களை மீண்டும் பணிக்கு அழைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அவசர நிலையைகருத்தில் கொண்டு ஓய்வு பெற்ற ஜெனரல்திம்மையா, ஜெனரல் குல்வந்த் சிங், ஜெனரல் தோரட், ஜெனரல் வர்மா உள்ளிட்டோர் பணிக்குத் திரும்ப கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

அவசர நிலையை எதிர்கொள்ள பிரதமரின் தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய், திட்டத் துறை அமைச்சர் ஜி.எல்.நந்தா, பொருளாதார ஒருங்கிணைப்பு அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி, உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி, பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த சிறப்பு அமைச்சரவை குழு அடிக்கடி கூடி முக்கிய விவகாரங்கள் குறித்து முடிவெடுக்கும். குறிப்பாக அவசர நிலையால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்புக்கான அத்தியாவசிய தேவைகள், பொது விநியோகம் ஆகிய துறைகளில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்கவே அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது.

(கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா - சீனா போரின்போது, என்ன நடந்தது என்பது குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் தமிழாக்கம்.)

SCROLL FOR NEXT