கான்பூரில் 8 போலீஸார் சுட்டுக்கொல்லப்பட்ட பின் உத்திரப்பிரதேசக் கிரிமினல்கள் மீது அதன் காவல்துறை பிடி இறுகிறது. மாநிலம் முழுவதிலும் உலவும் கிரிமினல்களை கைது செய்து சட்டவிரோதமாக சம்பாதித்த அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உ.பி.யின் கான்பூர் ரவுடியான விகாஸ் துபேவை, பிக்ரு கிராமத்தில் பிடிக்க உ.பி. போலீஸ் படை சென்றது. கடந்த வியாழக்கிழமை இரவு நடைந்த சம்பவத்தில் டிஎஸ்பி, மூன்று உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 போலீஸார் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து உபி முதல்வர் யோகி தனது காவல்துறையின் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் உபியில் கிரிமினல் நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக, தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்து பொதுமக்களை மிரட்டி வரும் விகாஸ் துபே போன்ற ரவுடிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக, உ.பி.யின் அதிரடிப்படையின் சார்பில் பல்வேறு குழுக்கள் அமைத்து முடுக்கி விடப்பட்டுள்ளன. இவர்களிடம் உ.பி.யின் முக்கிய ரவுடிகள் என அதன் காவல்துறையிடம் 25 பெயர்களுடன் இருந்த ஒரு பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் பலரும் உ.பி.யின் முக்கிய அரசியல் கட்சிகளிலும், சுயேச்சையாகவும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி, தோல்வியை கண்டவர்கள். இவர்களுடன் மேலும் பலர் புதிதாகச் சேர்க்கப்பட்டு புதுப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதில் முதல் நபரான முக்தார் அன்சாரி உ.பி.யின் மாவ் தொகுதியில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏவாக உள்ளார். இவர், காஜிபூரில் பாஜக பிரமுகர் கிருஷ்ணானந்த் ராயை கொலை செய்த வழக்கில் 13 வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவதாக இருக்கும் கவுரா ராய் என்றழைக்கப்படும் உமேஷ் ராய், உ.பி.யின் ராம்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோல், பெரும்பாலான உ.பி.யின் ரவுடிகள் அனைவரும் ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளனர்.
இவர்கள் சிறையில் இருந்தபடி தனது சகாக்களுக்கு உத்தரவிட்டு கிரிமினல் நடவடிக்கைகளை தொடர்வதாகப் புகார் உள்ளது. உபியின் பெரும் தொழிலதிபர்களிடமும், அரசு டெண்டர்களில் தமது பங்காகவும் அவர்கள் வசூலிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், அவர்களது குடும்பத்தாரிடம் உள்ள சொத்துக்களுக்கு கணக்கு கேட்டு அவற்றை ஜப்தி செய்ய உபி அரசு திட்டமிட்டுள்ளது. இந்தவகையில், காஜிபூரில் முக்தார் அன்சாரியின் மனைவியான அப்ஸா பேகம் பெயரில் உள்ள ஒரு ஓட்டலின் பெரும்பகுதி, அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்தவகையில், உ.பி. அரசின் நடவடிக்கைகள் மற்ற ரவுடிகளின் மீதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்தவகையில், கான்பூரின் ரவுடியான விகாஸ் துபேயின் பெயர் 8 போலீஸாரை சுட்டுக் கொல்வது வரை, இந்த முக்கிய 25 ரவுடிகளில் இடம்பெறவில்லை.