திருமலைக்கு சுவாமி தரிசனத்திற் காக ஆண்கள் துணை இன்றி பெண்கள் தனியாக வரவேண்டாம் என திருமலை-திருப்பதி தேவஸ் தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ண மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:
திருப்பதி பிரம்மோற்சவம் மிக சிறப்பாக நடைபெற்றது. தேவஸ் தான உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்தனர். இதன் பயனாக பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி வாகன சேவை மற்றும் மூலவரை தரிசித்தனர். பக்தர்களுக்கு தரிசனம், அன்ன தானம், தங்கும் இடம், குடிநீர், போக்குவரத்து, லட்டு பிரசாதம் விநியோகம் என அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டன. இந்த அனுபவத்தின் மூலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை மேலும் சிறப்பாக நடத்துவோம்.
நிறைவு நாளன்று காஞ்சிபுரத்தை சேர்ந்த இரு பெண்கள், ஆண் துணை யின்றி திருமலைக்கு வந்தனர். அவர்கள் முன்பின் தெரியாத ஒரு ஆணை நம்பி அவர் கொடுத்த டீயை குடித்து உள்ளனர். பின்னர் அவர் எடுத்து கொடுத்த அறையில் தங்கி உள்ளனர். இதில் அவர்களின் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டுப் போயின. எனவே ஆண் துணையின்றி பெண்கள் தனியாக திருமலைக்கு வந்து வெளி ஆட்களை நம்பி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.