மும்பையின் புறநகரில் கொட்டித் தீர்த்த கனமழையால கடந்த 24 மணிநேரத்தில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்துக்கும் மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து குஜராத், மகாராஷ்டிரா, அசாம் போன்ற மாநிலங்களில் பெய்து வருகிறது. மகாராஷ்டிராவின் புறநகர்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை முதல் நல்ல மழை பெய்துவருகிது. இருப்பினும் இடைவெளிவிட்டுப் பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ஆனால், நேற்று காலை முதல் இன்று காலை வரை தானே, பேல்பூர், மேற்கு புறநகர் பகுதியில் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் சாலையின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர். பேருந்துகளும் செல்ல முடியாமல் திணறின.
மும்பையின் புறநகர்ப் பகுதியில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 115.6 மி.மீ மழை பதிவாகியது.
மேலும் அடுத்த 24 மணிநேரத்துக்கு மும்பை, கொங்கன் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சான்டாகுரூஸ் வானிலை மையத்தின் தகவலின்படி மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில் 116.10 மி.மீ. மழை பெய்துள்ளது. அதேபோல மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 90 மி.மீ. மழையும், பால்கர் மாவட்டத்தில் 60.33 மி.மீ. மழையும் பதிவாகியது.
இதைத் தவிர்த்து நாசிக் வானிலை மையத்தில் பதிவான மழையின் அளவில், ரத்னகிரி, ஹர்னாய் போன்ற மாவட்டங்களில் கமனழை பெய்துள்ளது. ரத்னகிரியில் 13.4 மி.மீ. மழையும், ஹர்னாய் 5.9 மி.மீ. மழையும் பதிவாகியது. ஓஸ்மானாபாதா மாவட்டத்தில் 7.4 மி.மீ. மழை பதிவானது