இந்தியா

கரோனா, ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு தோல்விகள் எதிர்கால ஹார்வர்ட் ஆய்வாக இருக்கும்: மத்திய அரசு மீது ராகுல் கேலி

பிடிஐ

கோவிட்-19-ஐ கையாளுதல், ஜிஎஸ்டி அமலாக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றின் தோல்விகள் ஹார்வர்ட் வர்த்தகப் பள்ளியின் எதிர்கால ஆய்வுகளாக இருக்கும் என்று ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, பலி எண்ணிக்கை 19,693 ஆக அதிகரித்துள்ளது. உலகில் கரோனா பாதிப்பில் 3ம் இடத்துக்கு முனேறியுள்ளது இந்தியா.

சீனா விவகாரம், கரோனா பாதிப்பு, பொருளாதார சரிவு ஆகியவை குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி மீது கடும் விமர்சனங்களை வைத்து வரும் அவர் கோவிட்-19 நெருக்கடி குறித்து பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் ஒரு பகுதியை வீடியோ வடிவில் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மகாபாரதப் போர் 18 நாட்களில் வெல்லப்பட்டது. கரோனாவை வெல்ல 21 நாட்கள் என்று மோடி பேசியதும் வருகிறது.

மேலும் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்புப் பற்றிய வரைபடத்தையும் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்

அவர் தன் ட்விட்டரில், “தோல்விகள் நேர்வு பற்றிய எதிர்கால ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் ஆய்வுகள்: 1. கோவிட்-19, 2. பணமதிப்பிழப்பு நீக்கம், 3. ஜிஎஸ்டி அமலாக்கம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்தியா கரோனா பாதிப்புகள் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளதையடுத்து ராகுல் காந்தி இந்த ட்வீட்டை வெளியிட்டுள்ளார்

ஒரே நாளில் இந்தியாவில் 24,248 கரோனா பாதிப்புகள் ஏற்பட்டுளன. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்துக்கு நெருக்கமாகியுள்ளது.

20,000த்துக்கும் அதிகமானோர் 24 மணி நேர காலத்தில் கரோனாவினால் பாதிக்கப்படுவது இது தொடர்ச்சியாக 4வது நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT